சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில், ஆளுநருக்கு எதிராக அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை அதிமுகவும், திமுகவும் எப்போதும் எதிரும் புதிருமாக இருந்து வந்துள்ள நிலையில், அதிமுகவுடன் இணைந்து போராடலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில்,ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்ககாதது இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான வழக்கிலும், தமிழகஅரசு, அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், ஆளுநர் முடிவு தெரிந்த பிறகுதான் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவித்தது.
இந்த விவகாரத்தில், அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், தமிழகஅரசு ஆளுநரை வலியுறுத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்த நிலையில், நேற்று திடீரெ தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோர் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதையடுத்து ஆளுநர் விரைவில், அனுமதி வழங்குவார் என செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இந்த நிலையில், தமிழகஅரசின் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று கடிதம் எழுதி உள்ளார்.
இதையடுத்து டிவிட்பதிவிட்டுள்ள ஸ்டாலின், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த நேர்வில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்! கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட தமிழக முதல்வர் (@CMOTamilNadu) முன்வர வேண்டும்! என அழைப்பு விடுத்துள்ளார்.