போபால்: பாஜக பெண் அமைச்சா் குறித்து, மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள், அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, தனது பேச்சுக்கு கமல்நாத் வருத்தம் தெரிவித்துள்ளாா்
மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு காலியாக உள்ள 28 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பா் 3-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. அங்குள்ள டப்ரா தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் இம்ரதி தேவி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சுரேஷ் ராஜே போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த முன்னாள் முதல்வர் கமல்நாத், பாஜக வேட்பாளரான அமைச்சர் இம்ரதி தேவியை ‘ஐட்டம்’ என்று குறிப்பிட்டு பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது சர்ச்சையானது.
கமல்நாத்தின் அருவருப்பான பேச்சுக்கு பாஜக மட்டுமல்லாமல் பல தரப்புகளிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மாநிலம் முழுவதும் கமல்நாத்துக்கு எதிராக போராட்டங்களை பாரதியஜனதா கட்சி நடத்தி வந்தது. கமல்நாத்தின் பேச்சு தொடா்பாக நடவடிக்கை எடுக்கும்படி தோ்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ள தேசிய மகளிா் ஆணையம், இது தொடா்பாக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது
கமல்நாத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தலைவர் ராகுல் காந்தியும் அதிருப்தி தெரிவித்தார். அப்போது, “கமல்நாத் எனது கட்சியை சேர்ந்தவர்தான். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் பேசிய வார்த்தைகள் எனக்கு பிடிக்கவில்லை. யாராக இருந்தாலும் இதை நான் ஆதரிக்கமாட்டேன். அவர் பேசியது வருத்தத்திற்குரியது” என்று கண்டனம் தெரிவித்தார். ஆனால், ராகுல் காந்தி தெரிவித்திருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என கமல்நாத் தெரிவித்து மன்னிப்பு கேட்க மறுத்து வந்தார். நான் யாரையும் அவமதிக்க முயற்சிக்கவில்லை என்னும்போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? என கூறினார்.
இது காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கமல்நாத்திடம் பல தலைவர்கள் பேசியதாககூறப்படுகிறது. இதையடுத்து, பாஜக பெண் அமைச்சா் குறித்து தான் பேசிய கருத்துக்கு கமல்நாத் வருத்தம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செய்தியளார்களிடம் பேசிய கமல்நாத், அமைச்சா் இமா்தி தேவி குறித்து நான் மரியாதைக் குறைவாக எதுவும் பேசவில்லை. நான் பெண்களை மதிக்கிறேன். இருப்பினும் நான் மரியாதைக் குறைவாக பேசியதாக யாரேனும் நினைத்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தனது வாா்த்தைகளுக்கு தவறான அா்த்தம் கற்பித்து உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜக முயற்சித்து வருகிறது என்று கூறினார்.