
ஸ்ரீசாந்த் பிறந்தநாள் (1983)
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது விளையாட்டினால் அல்லாமல் சர்ச்சைகளால் பிரபலமானவர். சக விளையாட்டு வீரர் ஹர்பஜன் சிங்கை, இவர் மைதானத்தில் கிண்டல் செய்ய.. அவர் இவரை அடிக்க.. சர்ச்சையானது. மேலும், கிரிக்கெட் சூதாட்டத்தில் பங்கு பெற்றதற்காக தண்டனை பெற்றும் பிரபலானார் ஸ்ரீசாந்த்.
இவர் 24 டெஸ்ட் போட்டிகளிலும், 51 ஒருநாள் போட்டிகளிலும் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
ஐபிஎல் 6 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல் அணியில் விளையாடிய போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனால் கைது நடவடிக்கைக்கு ஆளானார். கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.

ரொனால்ட் ரீகன் பிறந்தநாள் (1911)
ரொனால்ட் ரீகன், ஐக்கிய அமெரிக்காவின் 40 ஆவது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர். . அமெரிக்க குடியரசுத் தலைவர்களிலேயே அதிக வயதில் (69) பதவி ஏற்றவர் இவர்தான்.
அரசியலில் நுழையும் முன்னர் ஹாலிவுட் நடிகராகவும், தொலைக்காட்சி தொடர் நடிகராகவும் இருந்தார். ஆனால் அந்த பிரபலத்தை வைத்து மட்டும் இவர் அரசியலில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரிப்பப்லிக்கன் கட்சியைச் சேர்ந்த இவர், பொதுவுடைமைக் கொள்கைகளையும் சோசலிசக் கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்தவர். ஜூன் 5, 2004 அன்று மறைந்தார்.

சியாமா சாஸ்திரிகள் நினைவு நாள் (1827)
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள், ஏப்ரல் 26, 1762 –அன்று, தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா ஆகும்.
சிறு வயது முதலே சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அம் மொழிகளில் பெரும் புலமை பெற்று, பாடல்கள் இயற்றும் ஆற்றல் பெற்றார்.
சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்கு அறிந்திருந்த சியாமா சாஸ்திரிகள் சுமார் 300 கீர்த்தனைகளை இயற்றினார். இசை நுணுக்கம் தெரிந்தவர்களே இவரது பாடல்களை நன்கு பாட முடியும் என்பது இசை வல்லுனர்கள் கூற்று.
பெரும்பாலும் காமாட்சி அம்மன் குறித்தே பாடியிருக்கிறார். அதே போல மதுரை மீனாட்சியம்மன் பேரில் பல கிருதிகளை இவர் இயற்றியுள்ளார். அம்மன் சந்நிதியில் நவரத்ன மாலிகை என்னும் பிரசித்தி பெற்ற ஒன்பது கிருதிகளைப் பாடியவர் இவர்.
Patrikai.com official YouTube Channel