பெங்களூரு: இஸ்லாமிய மதம் குறித்து கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ உறவினர் போட்ட முகநூல் பதிவால் பெங்களூருவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி பெங்களூரு புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்டசீனிவாச மூர்த்தியின் உறவினர், நவீன் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், இஸ்லாமியர் குறித்து சில கருத்துக்களை பதிவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அன்றைய இரவே டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி ஆகிய இடங்களில் இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு, காவல் நிலையங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்கப்பட்டன. வன்முறையை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் பலியானார்கள். இதன்பிறகு வன்முறை கட்டுக்குள் வந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார், எஸ்டிபிஐ நிர்வாகி முஷாமில் பாஷா உட்பட 421 பேரை கைது செய்துள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக காவல்துறையினர் 850 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். அதில், பெங்களூரு முன்னாள் மேயர் சம்பத்ராஜ், காங்கிரஸ் கவுன்சிலர் அப்துல் ரகீப் ஜாகீர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து, குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை கைது செய்யக்கோரி பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், பெங்களூரு கலவரத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து தேசிய புலனாய்வு (என்ஐஏ) அமைப்பு இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
கலவரத்துக்கு திட்டம் வகுத்து கொடுத்ததாக சையது சித்திக் என்பவரை கைது செய்ததுடன், சிவாஜி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் ஹர்ஷத், சாம்ராஜ் பேட்டை காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது கான் ஆகிய இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து, விசாரணை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.