அறிவோம் தாவரங்களை – துத்தி இலை செடி
துத்தி இலை செடி. (Abutilon indicum)
தமிழகம் உன் தாயகம்!
சாலைகள் கடற்கரையோரங்களில் தானே வளர்ந்திருக்கும் புதர் செடி நீ!
3 அடிவரை உயரம் வளரும் மூலிகைச் செடி நீ!
தென்னிந்தியாவில் அதிகம் காணப்படும் உன்னதச் செடி நீ!
கக்கடி, இக்கசி, அதி பாலா, துத்திக்கீரை, வட்டத்துத்தி எனப் பல்வகைப் பெயர்களில் பரிணமிக்கும் பசுமைச் செடி நீ!
சிறுதுத்தி, கருந்துத்தி, வாசனைத் துத்தி, அரசிலைத் துத்தி, கருந்துத்தி, பணியாரத் துத்தி, ஒட்டுத் துத்தி, பசுந்துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி, காட்டுத்துத்தி எனப் பலவகைப் பெயர்களில் விளங்கும் பல பொருள் குறித்த ஒருசொல் கிளவி நீ!
தென்னிந்தியாவில் அதிகம் காணப்படும் தேன்செடி நீ!
சிறுநீரகக் கோளாறு வீக்கம், பல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய், ரத்த வாந்தி, உடல் சூடு, வெள்ளைப்படுதல், வெண் மேகம், மலச்சிக்கல், முகப்பரு, சொறி, சிரங்கு, படை, அரிப்பு, தாதுபுஷ்டி, குடல்புண் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ! ‘
எப்பிணியும் சாந்தமுறும்; இப்புவியில் துத்தி இலையை’ என அகத்தியர் குணபாடம் போற்றிப் புகழும் அற்புத மூலிகைச் செடி நீ!
ஆண்மையைப் பெருக்கும் அற்புத மூலிகைச் செடி நீ!
இலை, பூ, வேர், பட்டை என எல்லாம் பயன்படும் நல்ல செடியே!
இதய வடிவ இலைகளை உடைய இனிய செடியே!
மஞ்சள் நிறப் பூப்பூக்கும் மகிமை செடியே!
பெரிய தோடு போன்ற காய் கொடுக்கும் அரிய செடியே!
இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இனிய செடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர்.ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050.