சென்னை: அமுமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமமுக கட்சி பணியில் தீவிரமாக இருந்த வெற்றிவேலுக்கு கொரோனா இருப்பது உறுதியாக, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: அ.ம.மு.க. பொருளாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வெற்றிவேல் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.