டில்லி

நீலகிரி மலையில் யானைகள் செல்லும் பாதையில் உள்ள உல்லாச விடுதிகளை உடனடியாக காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மலையில் உள்ள முதுமலை காடுகளில் யானைகள் செல்லும் பாதையில் பல உல்லாச விடுதிகள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.  இதனால் யானைகள் செல்லும் பாதைகள் தடைப்படுவதால் அவற்றின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.  மேலும் இதனால் மற்ற மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் யானைகளால் ஆபத்து ஏற்படுவதுடன் யானைகளின் இனப்பெருக்கமும் குறைகிறது.

இதைத் தடுக்க தமிழக அரசு யானைப்பாதையில் எவ்வித இடைஞ்சலும் இருக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.  ஆயினும் அந்த பாதைகளில் கட்டிடங்கள் கட்டப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த பகுதிகளில் உள்ள 39 விடுதிகளையும் உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.  இவற்றில் 309 கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.  இந்த மேல் முறையீட்டு மனுவைத் தலைமை நீதிபதி போப்டே, அப்துல் நசீர் மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.  இந்த அமர்வு தனது தீர்ப்பில் தமிழக அரசின் உத்தரவு மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து 39 விடுதிகளும் உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.