சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சுயசரியை தொடர்பாக எடுக்கப்பட்டும், தலைவி படம் மற்றும் குயின் வெப் சீரிஸுக்கு எதிராக ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் வரும் 10,11 தேதிகளில் இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல் விஜய் திரைப்படமாக எடுத்து வருகிறார். அதுபோல, குயின் என்ற பெயரில், பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ்மேனன் வெப் சீரிஸ் ஆக எடுத்து, ஆன்லைனில் வெளியிட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெயலலிதாவின் அண்ணான் மகளான ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெ.தீபா ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ வாரிசாக உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு குறித்து படம் எடுக்க தனது அனுமதி பெற வேண்டும் என்றும், தனது அனுமதி இல்லாமல் படம் எடுக்கப்பட்டு வருவதாகவும், தலைவி படத்தையும் குயின் தொடரையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, குயின் தொடரை ஒளிபரப்ப தடை இல்லை என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைவி படத்தில் தனது தந்தையை தவறாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த பட நிறுவனம், கதையை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் நவம்பர் 10,11 தேதிகளில் நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.