சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளார் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங்.

பஞ்சாப் மாநிலத்தில் அரசு வேலைகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். இன்று அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவித்து உள்ளார். அவரது தலைமையிலான அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் அரசு பதவிகளுக்கு நேரடியாக ஆள்சேர்க்கை நடத்தும்போது, பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. 2020ம் ஆண்டு பஞ்சாப் சிவில் சர்விசஸ் விதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த விவரத்தை தமது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் அமரிந்தர் சிங். அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: பஞ்சாப் பெண்களுக்கு இன்று ஒரு வரலாற்று நாள். ஏனெனில் எங்கள் அமைச்சர்கள் குழு, அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது நீண்ட தூரம் செல்லும் பயணமாகும். எங்கள் மகள்களை மேலும் மேம்படுத்துவதற்கும், மேலும் சமமான சமுதாயத்தை உருவாக்கவும் உதவும் என்று நான் நம்புகிறேன்.