சென்னை: சென்னையில் சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியை அக்டோபர் 15ம் தேதிக்கு செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
இதுகுறித்த சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்-1919, பிரிவு-104ன்படி, சொத்தின் உரிமையாளர்களால், அந்தந்த அரையாண்டு துவங்கிய முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரியானது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும்.
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்-1919க்கு, அரசால் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இச்சட்டத் திருத்தம் அரசாணையின்படி, அக்.01/2019 தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்பு அதிகாரி – மன்றம் அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து, சட்டத் திருத்தம் தொடர்பான விவரம் அரசிதழ்/ உள்ளூர் நாளிதழில் அறிவிக்கையாக (Notification) வெளியிடப்பட்டது.
அரசால் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, அரையாண்டு துவங்கிய முதல் 15 தினங்களில், சொத்து உரிமையாளர்களால் செலுத்தப்படும் சொத்துவரியில் ஊக்கத் தொகையாக ஐந்து சதவீதம் (அதிகபட்சமாக ரூ.5000/- வரை) அளிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சியால் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நடப்பு நிதி ஆண்டின் (2020-21) இரண்டாம் அரையாண்டில் அக்.10 தேதி வரை சொத்து வரி செலுத்திய 5,18,286 சொத்து உரிமையாளர்களுக்கு செலுத்தப்பட்ட சொத்துவரியில் ரூ.4.56 கோடி ஊக்கத் தொகையாக நேர் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்படி சட்டத் திருத்தத்தின்படி, அரையாண்டு துவங்கிய முதல் 15 தினங்களுக்குள் செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி செலுத்தப்படாமல் இருந்தால், செலுத்தப்பட வேண்டிய சொத்துவரியுடன் கூடுதலாக ஆண்டிற்கு இரண்டு சதவீதம் மிகாமல் தனிவட்டி விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, சொத்து உரிமையாளர்கள், நடப்பு நிதி ஆண்டின் (2020-21) இரண்டாம் அரையாண்டிற்கான (II/2020-21) சொத்து வரியினை குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது, வருகிற அக்டோபர் 15-ம் தேதிக்குள் செலுத்தி, தங்களது சொத்துவரியின் மீது விதிக்கப்படும் தனிவட்டியினை தவிர்க்குமாறு ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார் என்று சென்னை மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.