சென்னை: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என திமுக தேர்தல் அறிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாத வாக்கில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. தமிழகத்தின் பிரதான கட்சிகளின் ஆளுமைமிக்க தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நிலையில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என வாக்காளர்கள் மட்டுமின்ற நாடு முழுவதும் உள்ள அரசியல்கட்சியினரிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களை தயார்படுத்தி வருகிறது. திமுகவில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உங்ளளது. இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக டி.ஆர்.பாலு தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவின் முதல் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. டி.ஆர்.பாலு எம்.பி. பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில், “2021 – சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்களை, நேரிலோ – அஞ்சல் மூலமாகவோ – manifesto2021@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிடுங்ககள் என்று தெரிவித்து உள்ளார்.