மதுரை: அரசாங்க பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு நடப்பாண்டே வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இதுதொடர்பாக ஆளுநரின் செயலர் இன்று பிற்பகலில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை வரும் 16ந்தேதி வெளியிட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து நடப்பாண்டே அமல்படுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் இருந்து மருத்துவம் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்துவிட்டது. இதையடுத்து, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் மாநில அரசு, அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கான புதிய சட்டத்தை கொண்டு வந்தது.
அதன்படி, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதில் 7.5 சதவீத “கிடைமட்ட இடஒதுக்கீடு” வழங்கும் மசோதா தமிழக அரசால், கடந்த மாதம் நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, செப்டம்பர் மாதம் 15ந்தேதி (september 15. 2020) சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சா, நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கடந்த சில ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவது பெருமளவில் சரிந்ததை அடுத்து இந்த இடஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத இடஒதுக்கீடு, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 300 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை உறுதி செய்யும் என்றும், நீட் தேர்வு நடத்துவதை அரசாங்கம் இன்னும் எதிர்க்கிறது என்றும் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழகம் தகுதியானது என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
“அரசு பள்ளி மாணவர்களின் நலன்களுக்காக, மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதில் இட ஒதுக்கீடு பெற அவர்கள் தகுதி பெறுவார்கள் என்று நான் மார்ச் 21, 2020 அன்று சட்டமன்றத்தில் தெரிவித்தேன். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தேன். இதற்காக ஒரு சட்டத்தை குழு பரிந்துரைத்தது, இது மாநில அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது” என்று முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த மசோதாவுக்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழகஅரசின் சட்ட முன்வடிவின்படி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு நடப்பாண்டே அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதுவரை நீட் தேர்வு முடிவை வெளியிடக்கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக ஆளுநரின் செயலர் இன்று பிற்பகலில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு தள்ளி வைத்துள்ளது.