டெல்லி: மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் அதிகப்படியான கொரோனா மருத்துவக்கழிவுகள் சேகரமாகின்றன என்று மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த 4 மாதங்களில் இந்தியா 18,006 டன் கோவிட் -19 மருத்துவக்கழிவுகள் உருவாகின. அவற்றில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 3,587 டன் மருத்துவக்கழிவுகள் குவிந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு தெரிவிக்கிறது.
ஜூன் மாதத்தில் இந்தியாவில் 3,025 டன் கோவிட் -19 கழிவுகள் குவிந்தன.  மகாராஷ்டிராவில் மட்டும் 524 டன், குஜராத் (350 டன்), டெல்லி (333 டன்) மற்றும் தமிழ்நாடு (312 டன்) கழிவுகள் குவிந்தன. செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சுமார் 5,500 டன் கோவிட் -19 கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டதாக புள்ளி விவரத்தில் கூறப்பட்டு உள்ளது.
குஜராத், நாட்டில் உயிரியல் மருத்துவ கழிவுகளை எரிக்கும் அதிக திறன் கொண்ட மாநிலமாகும். இது பல்வேறு பகுதிகளில் கழிவுகளை அகற்ற 20 மையங்களை கொண்டுள்ளது. தினமும் சுமார் 58,000 கிலோ கழிவுகள் அழிக்கப்படுகின்றன. அதில் அகமதாபாத் நகரம் மாநிலத்தில் 65% கொரோனா மருத்துவக்கழிவுகளை உற்பத்தி செய்கிறது.
ஜூன் முதல், அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 18,006 டன் கொரோனா மருத்துவக் கழிவுகளை உருவாக்குகின்றன. தரவுகளின்படி, ஜூன் முதல் 4 மாதங்களில் மகாராஷ்டிரா 3,587 டன் கோவிட் கழிவுகளை உற்பத்தி செய்தது. தமிழ்நாடு (1,737 டன்), குஜராத் (1,638 டன்), கேரளா (1,516 டன்), உத்தரப்பிரதேசம் (1,432 டன்), டெல்லி ( 1,400 டன்), கர்நாடகா (1,380 டன்), மேற்கு வங்கம் (1,000 டன்) கழிவுகள் உற்பத்தியாகின.
செப்டம்பர் மாதத்தில் 5,490 டன் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டன. அதில் குஜராத் அதிகபட்சம் 622 டன் உற்பத்தி செய்துள்ளது, அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு (543 டன்), மகாராஷ்டிரா (524 டன்), உத்தரப்பிரதேசம் (507 டன்) மற்றும் கேரளா (494 டன்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.