உறவுகள் – கவிதை பகுதி 4

இந்நாள் மகள்

பா. தேவிமயில் குமார்

 

 

இளவரசன் என்றும்

எழிலரசன் என்றும்

சீராட்டியவர்கள்

“சீ” போ என விரட்டி விட்டனரே !

 

கடலில்

கலக்காமல்

களர் நிலத்தில்

கலந்த “ஆறு” நாங்கள் !

 

நீந்த வழியில்லாமல்

நிலை தடுமாறி விழுந்த

நிலாக்கள்,

நாங்கள் அல்லவா ?

 

ஜனனம் இல்லாத

ஜனத்தொகை கொண்ட

ஜாதி நாங்களல்லவா ?

 

அழகியல் மேலும்

அன்பியல் மேலும்

எங்களுக்கிருக்கும்

ஈர்ப்பு உங்களுக்கு

எப்போதும் புரியப் போவதில்லை !

 

கருப்பண்ணன்

கோயிலுக்கு வேண்டியே

உன்னைப் பெற்றேன்

என அம்மா, சிறுவயதில்

உச்சி முகர்ந்த போது, அவள்

அறியவில்லை,

என் பிறப்பின்

இரகசியத்தை !

 

வீட்டுக்கு ஒரு

விளக்கேற்றும்

தேவதையைக் கூட்டி வா,

என அம்மா

என் திருமண வயதில்

சொன்ன போது

சிந்தினேன் மனக் கண்ணீரை !

 

எனக்குப் பிறகு

இந்த குடும்பத்தை

ஏற்று நடத்திடு,

என தந்தை

சொன்ன போது

எந்த வார்த்தைகளும்

என்னிடமில்லை சொல்லிட !

 

ஆணாகப் பிறந்தும்

அவஸ்தைப் படுகிறோம்

அல்லும் பகலும்

எங்கள் “செல்கள்”

ஏங்கித் தவிப்பது

உங்களுக்குத் தெரியுமா ?

 

கரும் கூந்தலும்

கண் மையும்

முகப் பூச்சும்,

நகப் பூச்சும்,

உதட்டுச் சாயமும்

உருவ மாற்றமும்

குதிகால் உயர செருப்பும்

கழுத்தில் அணிகலனும்,

கையில் வளையும்

கால் கொலுசும்

மஞ்சள் கயிறும்

மலர்ச் சரங்களும்

மகிழ்வுடன் சூட

மனம் ஏங்குகிறது !

 

மனதில் ஒரு வலியும்

உடலில் ஒரு வலியும்

அப்பப்பா,

அய்யய்யோ, வேதனை ! வேதனை !

 

எங்கள் பாதைகளில்

ஏனிந்த குறுக்கீடுகள் ?

எங்களுக்கென ஒரு

உலகத்தில் வாழ

ஆசைப்படும் போது

அவமானத்தையே சந்திக்கிறோம் !

 

ஓடிக் கொண்டேயிருக்கிறோம்

தேடித் தேடி வந்து

அடிக்கிறீர்கள், வார்த்தைகளால்

விடிவில்லையா ? இதற்கு ?

 

ஏழு உலகங்கள் இருக்கிறதென

புராணங்கள் கூறுகின்றன !

அதில் எங்களுக்கு

ஏதாவது ஒரு உலகத்தை

ஒதுக்கி விடுங்களேன் ! அங்கே

ஓடி விடுகிறோம் !

அப்போதாவது

ஓய்ந்திடுமா ?

உங்கள் ஏளனப் பார்வை

 

படிப்பும் பண்பும்

பல இருந்தாலும் எங்களை

பாவப்பட்டவர்களாகப்

பார்க்காதீர்கள் !

எங்களாலும் வாழமுடியும்

வழி விடுங்களேன் !

 

சமூகமே !

கேலி பேசவும்,

கிண்டல் செய்யவும்,

கிடைத்தவர்கள்

நாங்கள் தானா ?

 

விருப்பப்பட்டு,

வேண்டுமென்றே தான்

பெண்ணாக மாறினோம்

பின் ஏன், _ _ _ _ _ _

பட்டப்பெயர்கள் ???

எங்களையும்  இனி

அம்மா,

அக்கா,

என பெண் பாலினமாகவே

அழைக்கலாமே !!!

 

ஆணாக வாழப் பிடிக்காமல் தானே

அவஸ்தைகளை.

அனுபவித்து

பெண்ணானோம் !

 

அவஸ்தைப்பட்ட

அந்த பிறப்பிலிருந்து

ஆசைப்பட்ட

இந்த உருவத்திற்கு

மாறி நிற்கிறோம் !

மனிதர்கள் தானே

நீங்களும் ??

மனங்களைப்

புரிந்துகொள்ளாத

மனிதர்கள்………

 

அந்த வாழ்க்கை

அப்பப்பா, “நரகம்”

ஆனால்……

இந்த வாழ்க்கை

சொர்க்கம் தான்……..

சாதாரண சொர்க்கமல்ல

“கொடூர சொர்க்கமாக”

மாற்றிவிட்டீர்கள்

மனிதர்களே !

 

இப்படிக்கு

கண்ணீருடன்

முன்னாள் மகன்

இந்நாள் மகள்