கொரோனா பரவலின் தாக்கம் குறையாத நிலையிலும், ’பெல்பாட்டம்’ என்ற இந்தி படத்தின் ஷுட்டிங்கை ஸ்காட்லாந்து நாட்டில் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டு வந்துள்ளது, “பாலிவுட் படக்குழு.”
அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் லாரா தத்தா, ஹுமா குரேஷி, வாணிகபூர் ஆகியோருடன் நம்ம ஊர் ’’தலைவாசல்’’ விஜயும் நடிக்கிறார்.
7 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பில், அதுவும் வெளிநாட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டது குறித்து தலைவாசல் விஜய் பகிர்ந்துள்ள தகவல்.
“இதய துடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்சிசன் அளவு, உடலின் வெப்பநிலை ஆகியவற்றை கண்காணிக்கும் கடிகாரத்தை அணிந்து கொண்டுதான் அனைவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். எங்களை சந்திக்க விருந்தினர்களுக்கு அனுமதி இல்லை.
டாக்டர் ஒருவரும் எப்போதும் உடன் இருந்தார். அக்ஷய் குமாருடன் பணிபுரிந்தது இனிமையான அனுபவம்.
படப்பிடிப்பு தளத்தில் முதலாவது ஆளாக வந்து நிற்பார், அக்ஷய். என்னிடம் இருந்து சில தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொண்டார்.
அவர் இருந்தால் அரங்கம் கலகலப்பாக இருக்கும்.
கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கும் வகையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் அற்புதமான ஏற்பாடுகளை செய்திருந்தார்’’ என்று சிலாகித்தார், விஜய்.
– பா.பாரதி