கொல்கத்தா :
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து மே. வங்க முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. இதனை விமர்சித்து அந்த மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் “மே. வங்க மாநிலத்தில் நிகழும் குற்றங்கள் குறித்து அந்தந்த மண்டல ஆணையாளர்கள் எனக்கு மாதம் தோறும் அறிக்கை அனுப்பி வருகிறார்கள்.. அந்த அறிக்கை கவலை அளிக்கும் வகையில் உள்ளது.’’ என்று குறிப்பிட்டார்.
’’மே. வங்க மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 223 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. 639 கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன‘’ என்று அவர் கூறினார்.
’’இந்த புள்ளி விவரங்கள், அதிகாரிகளால், அவர்கள் கையெழுத்திட்டு ராஜ்பவனுக்கு அனுப்பப்பட்டவை. இதனை ட்விட்டரில் நான் வெளியிட்டால், உள்துறை அமைச்சகம் மறுத்து அறிக்கை வெளியிடுகிறது.’’ என்று தெரிவித்த ஆளுநர் ஜெக்தீப் தங்கர், “ட்விட்டரில் இந்த விவரங்களை நான் வெளியிட்டதில் தவறு இல்லை’’ என்றார்.
“உங்கள் ( திரினாமூல் காங்கிரஸ்) வீட்டில் பற்றி எரியும் நெருப்பை முதலில் அணையுங்கள், அதன் பிறகு அடுத்த வீட்டில் நடப்பதை பார்க்கலாம்’’ என மம்தா பானர்ஜி கட்சிக்கு அறிவுறுத்தினார், ஆளுநர் தங்கர்.
– பா.பாரதி