சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் தொண்டர்களால் சூழப்பட்டுள்ளது.
இன்றைய அறிவிப்பின்போது, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட உள்ளதாகவும், அதிமுக தலைமை பொறுப்பு ஓபிஎஸ்-க்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை சந்திக்க, வலிமையான தலைமை அதிமுகவில்இல்லாததால், தற்போதைய முதல்வர் எடப்பாடிக்கும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. மேலும் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின் முடிவில் அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, அதன்பிறகு சில நாட்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேற்று நள்ளிரவு வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆனால் இறுதிமுடிவு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களத்திலும், தொண்டர்கள் இடையிலும் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என்னும், முதல்வர் வேட்பாளர் பதவி எடப்பாடிக்கும், கட்சிப்பதவி ஓபிஎஸ்க்கும் வழங்கங்பபடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குமுன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நிபந்தனையான 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் காலை முதலே அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் தலைமை அலுவலகம் வந்தவண்ணம் உள்ளனர்.