மணாலி:
சுரங்கபாதையில் செல்பி எடுத்த சம்பவம் உள்ளிட்ட மூன்று விபத்துக்கள் 24 மணி நேரத்தில் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிக நீளமான ‘அடல்’ சுரங்கப்பாதையை ஹிமாச்சல் பிரதேசத்தில் பிரதமர் மோடி கடந்த 3ம் தேதி திறந்து வைத்தார். ஹிமாச்சலப் பிரதேசத்தில் மணாலி மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க, மறைந்த முன்னாள் பிரதமர், வாஜ்பாய் ஆட்சியின் போது இந்த சுரங்க திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து இதற்கான பணிகள் நடந்து முடிந்து, அந்த சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டுக்காக நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதை பிரதமர் மோடி, கடந்த அக்.3 ம் தேதி திறந்து வைத்தார். வாஜ்பாய் நினைவாக இந்த சுரங்கத்துக்கு அடல் என பெயரிடப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து, 10 ஆயிரம் அடி உயரத்தில் இந்த நெடுஞ்சாலை சுரங்கம் அமைந்துள்ளது. 9.02 கி.மீ தூரம் கொண்ட இந்த சாலை 30 அடி அகலமும், 17 அடி உயரத்துடன் இரு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தால் மணாலி மற்றும் லே இடையேயான பயண துாரம், 46 கி.மீ., குறைகிறது. பயண நேரமும், ஐந்து மணி நேரம் குறையும். அதிகபட்சம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் அடல் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காலங்களில் முன்பு இந்த சாலை 6 மாதத்திற்கு மூடப்பட்டு இருக்கும். இனி ஆண்டு தோறும் போக்குவரத்து தடையில்லாமல் நடைபெறும் என கூறப்பட்டது.

இதனிடையே சுரங்கப்பாதை திறந்து வைக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக மூன்று விபத்துக்கள் நடந்துள்ளது என பார்டர் ரோடு ஆர்கனைசேசன் தலைமை பொறியாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: சுரங்கப்பாதையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து கடந்த ஜூலை மாதம் 3 ம் தேி முதல்வர் அலுவலகத்திற்கும், அக்.,3 ம் தேதி உள்ளூர் நிர்வாகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 4- ம் தேதி ஒரே நாளில் மூன்று விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற தன்மையே காரணம்.

ஒரு சில வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை சாலை நடுப்பகுதியில் நிறுத்தி செல்பி எடுத்துள்ளது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.மேலும் சுரங்கப்பாதை இரு வழி பாதையாக இருப்பதால் முந்தி செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் எளிதில் தீப்பற்றக்கூடியதான பெட்ரோல் சிலிண்டர் ஏற்றிச் செல்லும் லாரிகள் இப்பதையில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

சுரங்கப்பாதை பாராமரிப்பு பணிக்காக தினந்தோறும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் என இரண்டுமணி நேரம் மூடப்படும். என கூறினார்.