சென்னை: அதிமுகவில் மீண்டும் எடப்பாடிக்கும், ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், கட்சியின் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று அதிமுக மூத்த உறுப்பினர் மதுசூதனன் தெரிவித்து உள்ளார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றால் கட்சியின் முழு பொறுப்பும் தன்னிடம் வழங்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் நிபந்தனை விதித்துள்ளார். இதனால், ஏற்கனவே அறிவித்தபடி நாளை கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்தநிலையில், செய்தியளார்களை சந்தித்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், கட்சியைக் காப்பாற்ற ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது. அவைத்தலைவர் பதவி ஜெயலலிதா எனக்கு கொடுத்தது. நான் இருக்கும் வரை அவைத்தலைவராகத்தான் இருப்பேன்.
என்னை கட்சியின் அவைத்தலைவராக தேர்வு செய்யும்போது சசிகலா, பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் ஆகியோரை நியமிக்க கூறினார். ஆனாலும் ஜெயலலிதா என்னை தான் நியமித்தார் என்றவர், கட்சி, தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்களை முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசித்து வருகிறார்கள். ஓபிஎஸ் எந்த நோக்கத்திற்காக தர்மயுத்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவார். அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறனிர்.