கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். ஆனால், துரதிருஷ்டவசமாக மறுநாளே அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,395 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,25,391 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 62 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை 4993 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 4179 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் 745 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை தொற்று பாதிப்பு காரணமாக 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ராதா செட்டியார் (88), இவரது மனைவி சீதாலட்சுமி (80) மற்றும் இவர்களது மகன் ராமு (58) ஆகிய மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், துரதிருஷ்டவசமாக அவர்கள் 3 பேரும அடுத்த நாளே அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மூவரிடன் உடலும் கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் நேற்று மதியம் அடக்கம் செய்யப்பட்டனர்.