அசாம்:
சாமின் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய் நேற்று கெளஹாத்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பின்னர் அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்து விட்டதாக மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி, 85 வயதான தருண் கோகாய் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (GMCH)அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு விரைவில் தோற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது, ஆனால் அதற்குப் பின்னரும் அவருடைய உடல்நிலை காரணமாக மருத்துவமனையிலேயே இருந்தார்.

இதைப்பற்றி கெளஹாத்தி மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் தெரிவித்ததாவது: தருண் கோகாய் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் அவருடைய ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்துள்ளது, இருப்பினும் அவர் தற்போது நிலையாக உள்ளார், நாங்கள் அவருடைய நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதைப்பற்றி அசாமின் சுகாதாரத் துறை அமைச்சரான ஹீமாந்த் பீஸ்வா ஷர்மா தெரிவித்ததாவது: முன்னாள் முதல்வரின் நிலை குறித்து மூன்று முறை GMCH மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை காலை புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்களுடன் வீடியோ மூலம் கலந்தாலோசித்துள்ளனர், தேவைப்பட்டால் அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்லவும் தயாராக உள்ளோம். நான் இதைப்பற்றி அவருடைய மகன் கௌரவ் கோகாயுடன் பேசினேன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி அவருடைய நிலை மோசமடைந்து பின்னர் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் தற்போது அவர் பேசும் நிலையில் இருக்கிறார், ஆனால் மிகவும் சோர்வாக உள்ளார் நாங்கள் அனைவரும் அவரை கவனித்து வருகிறோம் என்று GMCH-ன் மருத்துவர் தெரிவித்துள்ளார்.