சென்னை :
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார், அவருக்கு வயது 74.
16 இந்திய மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உலகெங்கும் உள்ள இசைப் பிரியர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், உடல் நல குறைவு காரணமாக ஆகஸ்ட் 5 ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 1:04 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
எஸ்.பி.பி. என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், 4-ஜூன்-1946 ல் இன்றைய ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூரில் பிறந்தார். சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் ஏ.எம்.ஐ.இ படிப்பதற்காக சென்னை வந்த எஸ்.பி.பி. 1964 ம் ஆண்டு தெலுங்கு கலாச்சார அமைப்பு சார்பாக நடந்த இசை போட்டியில் முதல் பரிசை வென்றார். இதனைத் தொடர்ந்து, எஸ்.பி.பி., இளையராஜா சகோதரர்களுடன் சேர்ந்து இசை குழுவை நடத்திவந்தார்.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற தெலுங்குப் படத்தில் தனது முதல் பின்னணிப் பாடலைப் பாடிய எஸ்.பி.பி. தமிழில் தனது குரலை 1969 ம் ஆண்டு சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை எனும் இளையகண்ணி பாடலுக்காக பதிவுசெய்தார், இருந்தபோதும் அடிமைப்பெண் படைத்தில் எம்.ஜி.ஆருக்காக இவர் பாடிய ஆயிரம் நிலவே வா தான் தமிழில் வெளியான முதல் பாடல்.
40,000 பாடலுக்கும் மேல் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள எஸ்.பி.பி. 1981 ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும், இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதை 2001 லும் பத்ம விபூஷண் விருதை 2011 ம் ஆண்டும் பெற்றுள்ளார். தமிழில் கடைசியாக ரஜினியின் தர்பார் படத்தில் வந்த சும்மா கிழி பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.
சிறந்த பாடகருக்கான தேசிய விருதை ஆறு முறை (தெலுங்கு 3, தமிழ் 1, கன்னடம் 1, ஹிந்தி 1) பெற்றுள்ள எஸ்.பி.பி., தமிழ், தெலுங்கு, கன்னடப் பாடல்களுக்காக அந்தந்த மாநிலத்தின் விருதுகளை பலமுறை பெற்றுள்ளார்.
தனது 50 ஆண்டிற்கும் மேலான இசை பயணத்தில் எஸ்.பி.பி. பாடிய சில புகழ்பெற்ற பாடல்கள் ரஜினியின் அண்ணாமலை படத்தில் “வந்தேண்டா பால்காரன்….” ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ரோஜா படத்தில் “காதல் ரோஜாவே …” சூர்யாவின் 7ம் அறிவு படத்தில் “யம்மா யம்மா காதல் ….” அஜீத்தின் நீ வருவாய் என படத்தில் “பார்த்து பார்த்து கண்கள்…..” வித்யாசாகர் இசையில் “மலரே மௌனமா….” போன்ற பாடல்களை பாடியுள்ளார்.
ஹரிகதை கலைஞரான எஸ்.பி. சாம்பமூர்த்தி – சகுந்தலம்மா தம்பதிக்கு பிறந்த எஸ்.பி.பி. க்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள். இவரது மனைவி சாவித்ரி, மகன் எஸ்.பி. பி. சரண் மகள் பல்லவி.
ஏ.எம்.ஐ.இ படிப்பதற்காக சென்னை வந்த எஸ்.பி.பி. தனது கல்லூரிக்கு செல்வதற்காக சூளைமேடு பகுதியில் தனது வாழ்க்கையை தொடங்கினார் என்பதும் தற்போது அதே சூளைமேடு பகுதியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்திகேட்டு அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.