சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அவர் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இணை நோயின் காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் நலமாக இருந்தவர் இணை நோயின் காரணமாக, அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால், அவரது உடல்நிலை கவலைக்கிடமானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் பலரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. எஸ்பிபி பாலசுப்ரமணியம் விரைவில் வீட்டிற்கு வர ஆர்வமாக இருப்பதாக அவரது மகன் எஸ்பி சரண் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று எஸ்பிபியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து, அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்பட்டது. தீவிர சிகிச்சையில் உள்ள எஸ்பிபியை காண அவரது நண்பர்கள் இளையராஜா, பாரதிராஜா உள்பட எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி உள்பட அவரது குடும்பத்தின் இன்று காலை முதலே மருத்துவமனையில் குவிந்தனர்.
இதையடுத்து மதியம் 1.10 மணி அளவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து மருத்துவமனை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.