இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனைகள் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் முப்பதாயிரம் தன்னார்வலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதும் சர்வதேச அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் தனித்துவ கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டறிய அனைத்து நாடுகளும் முயன்று வருகின்றன. இதில், அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களுடைய மூன்றாம் கட்ட சோதனையைத் தொடங்கியுள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் V, உலகின் முதல் தடுப்பு மருந்தாக அந்த நாடால் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்கனவே தடுப்பு மருந்து கொடுக்கப்படும் பணி தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில், இந்திய மருந்துகள் உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக்கின் கோவேக்சின் ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் இருந்தது. தற்போது அந்த சோதனைகளின் முடிவை இந்த மருந்துகள் கட்டுபாட்டு அமைப்பிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

 

 

பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாய் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் இப்பொது மூன்றாம் கட்ட பரிசோதனைகளுக்கு தேவையான மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறோம். விரைவில் எங்களுடைய மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்கவிருக்கிறோம். மேலும், சில நிறுவனங்களுடன் இணைந்து கோவேக்சின் மருந்தை உற்பத்தி செய்வதற்கான திறனை மேம்படுத்தும் முயற்சிகளில் இருக்கிறோம் என்றார் .

அக்டோபரில் கோவேக்சின் மருந்தின் மூன்றாம் கட்ட சோதனையில் சுமார் முப்பதாயிரம் பேருக்கு கோவேக்சின் தடுப்பு மருந்தினைச் செலுத்தி பரிசோதிக்கவும் பாரத் பயோடெக் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து 4-5 நாடுகளில் கோவேக்சின் தடுப்பு மருந்து தயாரிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. ஆண்டுக்கு குறைந்தபட்சமாக  1 பில்லியன் டோஸ்கள் கோவேக்சின் மருந்தை உற்பத்தி செய்யவும்  இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.