புனே
கங்கணா ரணாவத்துக்கு போதை மருந்து தடுப்பு துறை ஏன் சம்மன் அனுப்பி விசாரிக்கவில்லை என மகாராஷ்டிரா பாஜக தலைவர் பிரவின் தாரேகர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு பாலிவுட் நடிகர்கள் போதை மருந்து பயன்படுத்துவது குறித்துப் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. சுஷாந்த் சிங் காதலி நடிகை ரியா சக்ரவர்த்தி மீது பீகார் காவல்துறை வழக்குப் பதிந்துள்ள நிலையில் அவரை தேசிய போதைப் பொருள் தடுப்புத் துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
மும்பையில் போதைப் பொருள் தடுப்புத் துறை நடிகை தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் மற்றும் ரகுல் பிரீத் சிங் ஆகியோருக்கு விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி உள்ளது. தற்போது மகாராஷ்டிர சிவசேனா அரசுக்கு எதிராகக் கருத்துக்கள் கூறி வரும் நடிகை கங்கணா ரணாவத் தாம் முன்பு போதைப் பொருளை எடுத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்து இருந்தார்.
இது குறித்து மகாராஷ்டிர பாஜக தலைவர் பிரவின் தாரேகர், ”கங்கணா ரணாவத் தமக்குப் போதைப் பொருள் பழக்கம் உள்ளதாக ஏற்கனவே கூறி உள்ளார். ஆனால் அவர் மீது போதைப் பொருள் தடுப்புத் துறை ஏன் விசாரணை நடத்தவில்லை? சட்டத்தின் முன்பு நாட்டில் உள்ள அனைவரும் சமம். அவரையும் விசாரிக்க வேண்டும்.
வளர்ந்து வரும் நடிகர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவதை யாரும் விரும்ப மாட்டார்கள். அரசு இதைத் தடுக்க ஏன் எவ்வித முயற்சியும் எடுக்காமல் உள்ளது? இவ்வாறு விசாரணைக்கு வருமாறு யாருக்காவது சம்மன் அனுப்புவதில் தேசிய போதைப் பொருள் தடுப்புத் துறைக்கு ஏதும் பிரச்சினை உள்ளதா எனத் தெரியவில்லை” எனக் கூறி உள்ளார்.
ஏற்கனவே கங்கணா ரணாவத்துக்கு சம்மன் அனுப்பாதது குறித்து பிரபல நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான நக்மா கேள்வி எழுப்பி உள்ளார்.