கொரோனா வைரஸ் தடுப்பு முந்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய ரஷ்யா ஆர்வமாக உள்ளது என ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறினார். இந்தியாவில் COVID-19 தடுப்பு மருந்தைத் தயாரிக்க இந்திய அரசு மற்றும் உற்பத்தியாளர்களுடன் ரஷ்யா தொடர்பு கொண்டுள்ளது.
உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆக பதிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள ரஷ்ய மருந்து ஸ்புட்னிக் V-யை இந்தியாவில் உற்பத்தி செய்ய அதன் தயாரிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளனர். தடுப்பு மருந்துகள் உற்பத்தியில் முதலிடத்தில் இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து திட்டத்திற்கு நிதியளிக்கும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ், “இந்தியாவில் COVID-19 தடுப்பு மருந்து ஸ்பூட்னிக் V-யை உறபத்தி செய்ய மாஸ்கோ ஆர்வமாக உள்ளது” என்றார். ரஷ்ய தடுப்பு மருந்தை மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ளது. “இந்தியா, இந்திய விஞ்ஞானிகள் மற்றும் இந்திய உற்பத்தியாளர்களுடன் எங்களுக்கு பெரும் ஒத்துழைப்பு உள்ளது. அவர்கள் எங்கள் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்கிறார்கள்” என்று டிமிட்ரிவ் கூறினார்.
இதற்கு இந்தியாவின் உற்பத்தி திறன் ஒரு கூடுதல் காரணமாகும். எனவே இந்தியாவை உற்பத்தி பங்காளராக கொண்டு வருவதில் ரஷ்யா ஆர்வமாக உள்ளது என்று டிமிட்ரிவ் சுட்டிக்காட்டினார். “இந்தியா தங்கள் நாட்டில் தடுப்பு மருந்து தயாரிக்க திறந்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்ததை நாங்கள் கண்டோம். இந்தியா ஏற்கனவே தடுப்பு மருந்துகள் துறையில் அதிக நிறுவனங்களுடன் முதலீடு செய்துள்ளது மற்றும் உற்பத்தி திறன்கள் இந்தியாவில் ஏற்கனவே உள்ளன, எனவே மாஸ்கோ ஸ்பூட்னிக் V-யை உற்பத்தி செய்ய ஆர்வமாக உள்ளது, ” என்று டிமிட்ரிவ் கூறினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைகளை நடத்தவும் ரஷ்யாவும் தயாராக உள்ளது என்று ஆர்.டி.ஐ.எஃப் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார். இந்தத் தடுப்பு மருந்தை மலிவு விலையில் மற்றும் உலகளாவிய உற்பத்தி பங்களிப்பாளர்களுடன் அணுகும் முயற்சியில் சவூதி அரேபியா, யுஏஇ மற்றும் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுடன் ரஷ்யா செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
“இந்தத் தடுப்பு மருந்து பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது. எனது 90 வயது பெற்றோர் உட்பட எனது முழு குடும்பத்தினருக்கும் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல ரஷ்யாவின் 40 மில்லியன் மக்களுக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்படுவது எங்கள் இலக்கு. இதில் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை,” என்று டிமிட்ரிவ் கூறினார். மேலும், ஒரு தடுப்பு மருந்தை வாங்க நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை. ஆனால் உள்நாட்டு மருந்துகள் கட்டுப்பாட்டாளரின் அனுமதி தேவை என்று கூறினார்.