அரசுப் பள்ளியில் ஐந்தாயிரம் லிட்டர் சாராயம்..
ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் மது விருந்து நடத்துவதும், மாணவர்கள் குடிபோதையில் வகுப்புகளுக்கு வருவதுமான செய்திகளைப் படித்துள்ளோம்.
அதனை மிஞ்சும் வகையில் பள்ளிக்கூடத்தில் கள்ளச்சாராயம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் குச்பந்தியா மொகல்லா என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து சாம்பூர் காவல்நிலைய போலீசார், அந்த கிராமத்துக்கு பெரும் படையுடன் சென்று வீடு வீடாகச் சோதனை நடத்தினர்.
ஆனால் சாராயம் எதுவும் சிக்கவில்லை.
தங்களுக்குக் கிடைத்த தகவல் நம்பகமான நபர்களிடம் இருந்து கிடைத்தது என்பதால், சந்தேகத்தின் பேரில் அங்குள்ள அரசு ஆரம்ப பள்ளிக்கூடத்தில் புகுந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
வகுப்பறைகளில் சுமார் 200 கேன்களில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கிருந்த 5 ஆயிரம் லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊருக்குள் சாராயம் காய்ச்சிய ஆசாமி, போலீசுக்கு பயந்து பள்ளியில் சாராயத்தைப் பதுக்கி வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்
-பா.பாரதி.