நவாஸ்ஷெரீப் ‘பராக்..’பராக்’..
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப், மீண்டும் தீவிர அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளதாக அங்குள்ள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள அவர், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். லாகூர் நீதிமன்ற அனுமதி பெற்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.
’8 வாரத்தில் மீண்டும் நாடு திரும்ப வேண்டும்’ என நவாஸ்ஷெரீப்புக்கு நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. ஆனால் அவர் நாடு திரும்பவில்லை.
இந்நிலையில் .பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராகப் பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
இம்ரான்கான் அரசை எதிர்த்துப் போராடுவது குறித்து ஆலோசிக்க, பாகிஸ்தானில் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று ( ஞாயிறு) நடக்கிறது.
இதில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவால் புட்டோ சர்தாரி தொலைப்பேசியில் நவாஸ்ஷெரீப்பை தொடர்பு கொண்டு அழைத்தார்.
இதனை நவாஸ்ஷெரீப் ஏற்றுக்கொண்டதாகவும், அவர் இன்று அனைத்துக்கட்சித் தலைவர்களின் காணொலி காட்சி கூட்டத்தில் பங்கேற்பார் என்றும் அங்குள்ள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
நவாஸ்ஷெரீப், தீவிர அரசியலில் இறங்குவதற்கான முதல் படியாக இந்த , கூட்டம் அமையும் என்று கூறப்படுகிறது.
-பா.பாரதி.