புதுடெல்லி:
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் வருத்தம் தெரிவித்தார்.
முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து கருத்து தெரிவித்ததற்காக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று மக்களவையில் வருத்தம் தெரிவித்தார்.யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை, என் வார்த்தைகள் யாரையும் புண்படுத்தினால் நான் வேதனை அடைகிறேன். என்று அவர் மேலும் கூறினார். தாக்கூரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மக்களவை நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா பிஎம் கேர் நிதி தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள். பிஎம் கேர் நிதி வெளிப்படையாக இல்லை. இதில் மத்திய அரசு முறைகேடு செய்துள்ளது என்று அவர்கள் கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பிஎம் கேர் வெளிப்படைத் தன்மையோடுதான் இருக்கிறது. இதில் என்ன தவறு உள்ளது. இது மக்கள் கொடுத்த பணம். மக்களுக்கான பணம். கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யவே இந்த நிதி பயன்படுகிறது. உச்ச நீதிமன்றமே இதில் எந்த தவறையும் கண்டுபிடிக்கவில்லை.
பொது தொண்டு நிறுவனம் என்று முறையாக இதை பதிவு செய்து இருக்கிறோம். இதில் எல்லாம் வெளிப்படையாக உள்ளது. மாறாக முன்னாள் பிரதமர் நேரு 1948ல் உருவாக்கிய பிரதமர் தேசிய நிவாரண நிதி முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதில் வெளிநாட்டு நிதியை பெற முறையாக அனுமதி அளிக்கப்படவில்லை. இதை ஒரு குடும்ப நிதி போலவே காங்கிரஸ் பயன்படுத்தியது.நேரு குடும்பத்தின் நிதி போல இதை நேரு, சோனியா,ராகுல் பயன்படுத்தினார்கள். இதை உடனே விசாரிக்க வேண்டும் என்று பேசினார்.
அவரின் இந்த பேச்சு மக்களவையில் பெரிய அளவில் சர்ச்சை ஆனது. இவரின் பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இவரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.