சண்டிகார்: வேளாண்மை தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலைகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர் ஹரியானா மாநில விவசாயிகள்.
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு 3 அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து, ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஹரியானா மாநிலத்தின் குருஷேத்ரா நகரில், டில்லி – பஞ்சாப் இடையான நெடுஞ்சாலை 44 பகுதியில் நேற்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இச்சட்டங்கள் தொடர்பாக பாரத் கிஷான் யூனியன் தலைவர் குர்னம் சிங் கூறுகையில், “இந்தப் புதிய விவசாய சட்டங்கள் ஒரு அமைப்பை உருவாக்கும். அதன் கீழ் மண்டிஸ் சரிந்துவிடும். எம்எஸ்பி திட்டம் ரத்து செய்யப்படும்” என்றார்.
எவ்வாறாயினும், இந்தக் கட்டளைகளை அடுத்து கறுப்பு சந்தைப்படுத்துதலுக்கு அஞ்சி, குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உறுதி செய்வதற்கான சட்டத்தை உழவர் அமைப்புகள் கோருகின்றன.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கலைக்க காவல்துறையினர் எங்கள் மீது தடியடி நடத்தினர். இது கண்டிக்கத்தக்கது. அரசாங்கம் பேரணியை நிறுத்தியிருக்கக் கூடாது. அரசியல் தலைவர்கள்கூட, கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பேரணிகளை நடத்தி வருகின்றனர். காவலர்கள் தடியடி நடத்தியதில் பலரும் காயமடைந்தனர். ஆனால், தாக்குதல் நடத்தியதாக கூறி, விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டினர் விவசாயப் பிரதிநிதிகள்.