நீட் தேர்வை ரத்து செய்!
நீட் தேர்வு என்பது தமிழக மாணவர்களின் உயிர்க்கொல்லி தொற்றாக மாறி வருகிறது. தங்கை அனிதாவில் ஆரம்பித்து ஹரிஸ்மா வரை எண்ணற்ற மாணவ- மாணவிகளைத் தேர்வுக்கு முன்பாகவும் பின்பாகவும் தமிழகம் நீட் தேர்வுக்கு பலி கொடுத்துவிட்டது. சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு கூடாது என ஆரம்பம் முதலே தி.மு.கழகம் வலியுறுத்தி வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இத்தேர்வைக் கொண்டு வந்தபோது முத்தமிழறிஞர் கலைஞரின் முயற்சியால் நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என மாநிலங்களே முடிவு செய்யலாம் என்ற நிலை இருந்தது.
மத்தியில் கழகம் பங்கேற்கிற கூட்டணி அரசு அமையும் பட்சத்தில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கழகத் தலைவர் அவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் உறுதியளித்தார்.
அப்போது மட்டுமில்லாமல், நீட் திணிக்கப்பட்ட காலம் முதலே அதனை ரத்து செய்ய வேண்டுமென நம் தலைவர் அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஆனால், தற்போதைய மத்திய அரசு நீட் கட்டாயம் என வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது. ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க அரசோ இதைத் தடுக்காமல் மத்திய அரசிடம் சரணாகதி அடைந்துள்ளது.
நீட் கூடாது என்ற மனுக்களை உச்சநீதிமன்றமே தள்ளுபடி செய்தாலும், நடைமுறை பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அரசுகள் செயல்படுவது அவசியம்.
இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான கல்விமுறை கிடையாது. கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்களால் நீட் தேர்வுக்காகத் தனியார் பயிற்சி மையங்கள் செல்லும் நிலையும் இல்லை. கல்வி முறை ஒன்றாக இல்லாதபோது மருத்துவக்கல்வி பெற நாடு முழுவதற்கும் ஒரே நீட் தேர்வு என்பது மிகப்பெரிய அநீதியாகும். இதை ரத்து செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும். மாநில அரசு அதற்குரிய சாமர்த்தியமான திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும் என இந்தக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
ஆன்லைன் வகுப்பு பொதுத்திட்டம் அவசியம்!
தமிழகத்தின் கல்வி களத்தை அண்மைக்காலமாக ஆன்லைன் வகுப்பு முறையும் அதிலுள்ள குளறுபடிகளும் தற்கொலைக்களமாக மாற்றி வருகின்றன. மொபைல் வாங்க பணம் இல்லை, குடும்பத்தில் ஒரே மொபைலில் இரண்டு மூன்று பேர் படிக்க முடியவில்லை என ஆங்காங்கே தற்கொலைகள் மிகுந்து வருகின்றன. ஆன்லைன் வகுப்பு முறை மாணவர்கள் மனதில் ஏற்றத்தாழ்வு எண்ணங்களையும் விதைக்கக் காரணமாகிறது.
ஓரளவு தரமான ஒரு மொபைல் போனை வாங்கவே ரூ.7,000 வேண்டும் என்பதே இன்றைய எதார்த்தம். அதிலும் வசதியானவர்கள் வீட்டுப் பிள்ளைகள் விலையுயர்ந்த மொபைலை பயன்படுத்தும்போது, மொபைலே இல்லாமல் தவிக்கும் மாணவ- மாணவிகள் மனரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ஊரடங்கு நேரத்தில் கட்டணத்தைக் கட்ட சொல்லி நெருக்கும் தனியார் பள்ளிகள், அவர்கள் சொல்லும் மொபைலை வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. ஆன்லைன் வகுப்பு என்பது அனைவருக்குமானது இல்லை என்பதையே நிகழ்கால சம்பவங்கள் காட்டுகின்றன.
இவற்றைச் சுட்டிக்காட்டிய நம் தலைவர் அவர்கள் நீட் என்பதும் பலிபீடமாகவும் ஆன்லைன் வகுப்பு அனைவருக்குமானதாகவும் இல்லை என்று இந்த அரசைக் கண்டித்தார்.
கழகத் தலைவர் அவர்கள் வலியுறுத்தியபடி, ஆன்லைன் வகுப்புக்கென்று ஒரே மாதிரியான ஏற்றத்தாழ்வு இல்லாத, பாகுபாடற்ற கல்வியை வழங்குவதற்கான பொதுத்திட்டம் ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும். தொலைக்காட்சி உள்ளிட்ட மாற்று முறைகளை முழுமையாகப் பயன்படுத்தி வகுப்பு நடத்துவதற்குச் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும் அரசு ஆராய்ந்து மாணவர் உயிர்களைக் காக்க வேண்டும் என்றும் இந்தக்கூட்டம் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
நீட் கொடுமை – ஆன்லைன் குளறுபடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
நீட் என்னும் கொடிய தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவை நசுக்கி வருகிறது. ஸ்டெத்தெஸ்கோப் தொங்க வேண்டிய பிஞ்சுகளின் கழுத்தைத் தூக்குக் கயிற்றால் இறுக்கும் நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் நடத்தப்படும் குளறுபடிமிக்க ஆன்லைன் வகுப்பால் உயிர்ப்பலிகள் தொடருவதைக் கண்டித்தும், ஆன்லைன் வகுப்புக்கென்று ஒரே மாதிரியான ஏற்றத்தாழ்வற்ற பொதுத்திட்டம் ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கழகத் தலைவர் அவர்களுடைய அறிவுறுத்தல்படியும் தலைமைக் கழக அனுமதியோடும் இளைஞரணி – மாணவரணி சார்பில் வரும் 08-09-2020 செவ்வாய் அன்று காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
இதன்படி கழகத்தின் இளைஞரணி மற்றும் மாணவரணி நிர்வாகிகள், இரு அணிகளின் உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு அவரவர் வீட்டு வாசல் முன்பாக சமூக விலகல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து நீட் – ஆன்லைன் வகுப்பு குளறுபடிக்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகை, கருப்பு கொடியினை கைகளில் ஏந்தி, கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. ஆகிய தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் இயற்றப்பட்டன.
முன்னதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் அமைச்சர் அ.இரகுமான்கான், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார், உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன், மாணவரணி துணை செயலாளர் பி.ஆர்.எஸ்.ரங்கசாமி, நீட் தேர்வுக்கு அனுமதிச் சீட்டு வரவில்லை எனத் தற்கொலை செய்துகொண்ட புதுக்கோட்டை இ.களபத்தைச் சேர்ந்த மாணவி ஹரிஸ்மா, ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள ஒரே ஆண்ட்ராய்ட் போனை பயன்படுத்துவதில் சகோதரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த தங்கை நித்யஸ்ரீ, ஆன்லைன் வகுப்பு புரியவில்லை எனத் தற்கொலை செய்து கொண்ட ஆண்டிபட்டி மாணவர் விக்கிரபாண்டி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.