மும்பை:
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் அவரது காதலி ரியாவின் சகோதரர் 9-ம் தேதி வரை என்சிபியின் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (என்சிபி) விசாரணை மேற்கொண்டுள்ளது. சுஷாந்தின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் சுஷாந்த் சிங் வீட்டில் பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோரின் வீடுகளில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு ரியாவின் சகோதரர் ஷோயிக் சக்கரவர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் 9-ம் தேதி வரை என்சிபியின் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஷோயிக் மற்றும் மிராண்டா இருவரும் ராஜ்புத்தின் மரண வழக்கில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகன் ஷோயிக் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டபின் இந்த வழக்கு தொடர்பாக முதல்முறையாக அவரது தந்தை இந்திரஜித் சக்கரவர்த்தி மனம் திறந்துள்ளார்.
இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய அவர், “வாழ்த்துக்கள் இந்தியா. நீங்கள் என் மகனை கைது செய்துள்ளீர்கள். இந்த வரிசையில் அடுத்து என் மகள் இருக்கிறார் என நம்புகிறேன். அதன்பின்னர் யார் என தெரியவில்லை. நீங்கள் ஒரு நடுத்தர குடும்பத்தை திறம்பட சிதைத்துவிட்டீர்கள். ஆனால் நிச்சயமாக, எல்லாம் நீதிக்காக நடந்தால் நியாயமானது. ஜெய் ஹிந்த்” என்று கூறி உள்ளார்.
‘வாழ்த்துக்கள் இந்தியா’ என இந்திரஜித் சக்கரவர்த்தி கூறியது டுவிட்டரில் டிரெண்டாகி உள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான இந்திரஜித் சக்ரவர்த்தியையும் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரித்தது குறிப்பிடத்தக்கது.