சென்னை: திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் வரும் 9ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9 ஆம் தேதி நடைபெறும் என்று, திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டு,வேட்பு மனுக்களும் பெறப் பட்டது.
அதன்படி திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலு வும் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, 9ந்தேதி பொதுக்குழு கூட்டத்தின்போது, இருவரும் முறைப்படி பொறுப்பேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக தலைவராக முக ஸ்டாலின் பதவியேற்ற போது, அக்கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்த துரைமுருகன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் பொருளாளர் பதவியில் இருந்து வந்த நிலையில் , திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் காலமானதால் அவரது பதவி துரைமுருகனுக்கு வழங்கப்பட வேண்டும் என அக்கட்சி உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.