அலகாபாத்: அயோத்தியில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி புதிதாக அமையவுள்ள பாபர் மசூதி, இடிக்கப்பட்ட முந்தைய மசூதியின் அளவிலேயே அமையவுள்ளது என்று அதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தியின் தன்னிபூர் கிராமத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 5 ஏக்கர் நிலத்தில் மசூதியுடன் சேர்ந்து, ஒரு மருத்துவமனை, ஒரு நூலகம் மற்றும் ஒரு அருங்காட்சியகம் உள்ளிட்டவையும் அமையவுள்ளதாக அவர் கூறினார். மேலும், இந்த அருங்காட்சியகத்திற்கு ஓய்வுபெற்ற பேராசிரியரும், புகழ்பெற்ற உணவு விமர்சகருமான புஷ்பேஷ் பன்ட் மேற்பார்வையாளராக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மசூதி மொத்தம் 15000 சதுர அடியில் கட்டப்படும். இதுபோக மீதமுள்ள இடத்தில் மேற்குறிப்பிட்ட வசதிகள் அமையவுள்ளதாக தெரிவித்தார் அதார் ஹுசேன் என்ற அந்த நிர்வாகி. அந்த அருங்காட்சியகம், அந்த வளாகத்தில் அமையும் இந்தோ-இஸ்லாமிய ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தோ-இஸ்லாமிய கலாச்சார பவுண்டேஷன் என்ற பெயரில், மசூதி கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையின் பேராசிரியர் எஸ்.எம்.அக்தர், கட்டுமானத்திற்கான ஆலோசகராக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.