நெட்டிசன்:
பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
கொரோனா நெருக்கடி… நமக்குத் தெரிந்து பள்ளிகளை உடனடியாக இப்போதைக்கு திறக்கும் சூழல் இல்லை.
நீண்ட நேரம் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி, தொடர்ந்து கை கழுவுதல் போன்ற விஷயங்களெல்லாம் விளையாட்டுப் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஒத்துவராது..
அதேவேளையில் எதிர்காலம் மற்றும் வேலை வாய்ப்பை தீர்மானிக்கும் உயர்கல்வியில் தொடர்ந்து அலட்சியம் காட்டி விட முடியாது. ஆன்லைன் வகுப்புகள் என்பது எடுபடாது. இது ஊறுகாய் மாதிரி.. தொட்டு கொள்ளலாமே தவிர, சாப்பாடு போல முழுவதுமாக பிசைந்து சாப்பிட்டு விட முடியாது.
வகுப்பறையில் சக மாணவர்களோடு கலகலப்பாக உரையாடி பழகி ஆசிரியரின் நேரடி கற்பித்தலில் கிடைக்கும் பாடம் மற்றும் பொது அறிவை ஆன்லைன் வகுப்புகள் நிச்சயம் தந்துவிட முடியாது.
அப்படிப்பட்ட சூழலில் இப்போது தமிழக அரசு முதலில் அக்கறை காட்ட வேண்டியது பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் மீது..
50 பேர் கொண்ட ஒரு வகுப்பை மூன்றாக பிரிக்கலாம்.. பிற வகுப்புகள் நடக்காததால் பள்ளிகளில் காலியாக உள்ள வகுப்பறைகளில் போதிய சமூக இடைவெளி விட்டு மாணவர்களை அமர வைத்து வாரத்திற்கு இருமுறை என நேரடி வகுப்பை துவக்கலாம்..
நீண்ட இடைவெளிக்குப்பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வாரத்திற்கு இருமுறையாவது வந்து செல்லுதல் அவர்களுக்கு மன அளவில் அழுத்தத்தை குறைத்து உற்சாகத்தையும் மறுமலர்ச்சியும் தரும்.. பாடங்களிலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள் ..
17 வயதுடைய மாணவர்கள் சமூக இடைவெளி முககவசம் அணிதல் அவசியம், கைகளைக் கழுவி தூய்மையாக வைத்திருத்தல் போன்றவற்றை ஓரளவு புரிந்து கொள்வார்கள்..
அகில இந்திய தேர்வுகளுக்கு தயார் ஆக வேண்டிய மிக முக்கியமானவர்கள் இந்த பிளஸ் டூ மாணவர்கள் என்பதால்தான், அவர்கள் விஷயத்தில் அக்கறை காட்ட அரசை வலியுறுத்துகிறோம்..
வாரம் இருமுறை நேரடி வகுப்பு என்பதை சூழ்நிலைக்கு ஏற்றவாறு பின்னாளில் மாற்றிக்கொள்ளலாம்.
இதே வழிமுறைகளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்த பரிசீலிக்கலாம்.
இதையெல்லாம் நாளைக்கே செய்யுங்கள் என்று சொல்லவில்லை.. கணிசமான காலத்திற்கு பிறகு செயல்படுத்த இப்போதே யோசிக்கவாவது தயாராகுங்கள் என்று தான் தமிழக அரசுக்கு சொல்கிறோம்.