சென்னை: சென்னையில் உள்ள உரிமையியல் நீதிமன்றங்களில் 7ந்தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சென்னை நகர சிவில் நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆர்.செல்வகுமார் வழிகாட்டு தல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
சென்னை நகர உரிமையியல் நீதிமன்றங்களில், 7ம் தேதி முதல், நேரடி வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
சிவில், கிரிமினல் மேல்முறையீட்டு வழக்குகள் மற்றும் கிரிமினல் சம்பந்தப்பட்ட இதர வழக்குகளை தாக்கல் செய்ய விரும்பும் வழக்கறிஞர்கள், தங்களது மனுக்களை, எஸ்பிளனேடு நுழைவு வாயில் அருகில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட வேண்டும்.
அனைத்து ஆவணங்களும் முறையாக இருக்கும் மனுக்கள், விசாரணைக்கு ஏற்கப்படும்.
அவசர சிவில் வழக்குகளை தாக்கல் செய்யும்போது, வீடியோ கான்பரன்சிங் வாயிலாகவோ அல்லது நேரடியாக வழக்கை நடத்த விரும்புகிறார்களா என, விபரம் தெரிவிக்க வேண்டும்.
நேரடியாக ஆஜராக விரும்பும் வழக்கறிஞர்கள், அனுமதி சீட்டு பெற வேண்டும்.
நிலுவையில் உள்ள வழக்குகளை, நேரடி விசாரணை நடத்த, இருதரப்பு வழக்கறிஞர்களும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இருதரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராக, பொதுவான ஒரு தேதியை தெரிவிக்க வேண்டும். அந்த தேதியை, மூன்று நாட்களுக்கு முன் தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற வழக்குகளில், வழக்கறிஞர்களும், சாட்சிகளும் நீதிமன்றத்திற்குள் வந்து செல்ல, அனுமதி சீட்டு வழங்கப்படும்.
அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும், அனைத்து ஜாமின் மனுக்களும், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மட்டுமே நடைபெறும்.
சிறு வழக்குகளுக்கான நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்களில், வழக்குகள் தாக்கல் செய்வது, விசாரணை ஆகியவை மேற்கூறிய நடைமுறைகளின் படியே நடைபெறும்.
சி.பி.ஐ., நீதிமன்றம்,மகளிர் நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு சிறப்பு நீதிமன்றம் போன்றவற்றில், மனு தாக்கல் செய்ய விரும்புவோர், அதற்கான இ — மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.