சென்னை: தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட் டுள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணாக்கர்களுக்கு மாதம் 10 முட்டைகள் வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை இந்த மாதம் முதல் (செப்டம்பர்) முதல் அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்துப் பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டன. பள்ளிகள் திறப்பது குறித்த இன்னும் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தமிகஅரசு தொலைக்காட்சி வாயிலாக மாணாக்கர்களுக்கு கல்வி போதித்து வருகிறது.

இதற்கிடையில் கொரோனா பரவி வரும் சூழல் என்பதால், மாணவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு போன்ற உணவு பொருட்களை வழங்க வேண்டுமென்றும், தற்போது சத்துணவு செயல்படாத நிலையில், அதற்காக வாங்கப்படும் முட்டைகளை மாணாக்கர்களுக்கு வழங்க உத்தரவிட  வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து, அனைத்து மாணவர்களும், அவர் படிக்கும்  பள்ளிகளில் உலர்ப்பொருட்களை வழங்கப்பட்டது. இதையடுத்து முட்டை வழங்குவது தொடர்பாக தமிழகஅரசு முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தற்போது தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில்,   செப்டம்பர் 1 முதல் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 முட்டைகள் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு வெளியிட்டுள்ள  அரசாணையில்,  கொரோனா பரவல் காரணமாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சத்துணவு பொருட்களுடன், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 முட்டைகள் வழங்க தமிழக ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பள்ளிகள் திறக்கப்படும் வரை முட்டைகளை வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சத்துணவு பொருட்களுடன் முட்டைகளும் வீட்டிற்கே சென்று வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பள்ளிகளுக்கு மாணவர்கள் அவ்வப்போது வருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச பாட புத்தகங்கள் வழங்கும்போதே முட்டைகளும் சேர்த்து வழங்கும்படி அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் சுமார் 50லட்சம் மாணாக்கர்கள் சத்துணவு சாப்பிடுவதாகவும், அங்கன்வாடியில் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.