நாடு முழுவதும் 39ஆண்டுகளுக்கு பிறகு, தற்போதுதான் புதிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்த படுகிறது. இதற்கான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டு உள்ளது. இது கல்வியில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்றும் 2030க்குள் அனைவருக்கும் கல்வி என்ற நிலையை இது ஏற்படுத்தும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், மும்மொழி திட்டத்தின்கீழ் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் உடன் வேறு ஒரு மொழியை கற்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கல்வியை வலியுறுத்துவதால் அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து தமிழகஅரசு, புதியக் கல்விக்கொள்கை குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறிவித்தது.
இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை பற்றி ஆராய தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
குழுவிடம் இடம்பெற்றுள்ளவர்கள் விவரம்:
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன்
திருவள்ளூர் பல்கலைக்கழக துணைவேந்தர் தாமரைச்செல்வி,
காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன்
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.