தேமுதிகவின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான எல்.கே.சுதீஷ் வெளியிட்ட ஒரு தேவையற்ற(தகுதிக்கு மீறிய) கார்ட்டூன், தமிழக அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.

இன்னொரு பக்கம் பார்த்தால், கடந்த பல நாட்களாக, திமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டுவர வேண்டுமென்ற முயற்சிகள் வேகமெடுத்து வருவதாகவும் செய்திகள் உலா வருகின்றன. தேமுதிக வருகையின் மூலம் திமுகவின் மேற்கு மாவட்ட பலவீனத்தை ஈடுகட்டலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், ஏதும் பெரிதாக வளருமோ! என்று எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோரின் பேச்சைக் கேட்டு, வெறும் 41 இடங்களைப் பெற்று அதிமுக தலைமையில் கூட்டணி சேர்ந்தபோதே, அக்கட்சியின் சகாப்தம் முடிந்தது! அத்‍தேர்தலில், அதற்கு கிடைத்த பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தெல்லாம் அரசியல் ரீதியாக பார்த்தால் ஒரு அற்ப சந்தோஷமே..!

மற்றபடி, அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில், அக்கட்சி மிக உறுதியாக முடிவை நோக்கிச் சென்றது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்திற்கு நேர்ந்த உடல்நலக் குறைபாடு ஒருபக்கம் என்றால், அவரின் மனைவியும், மைத்துனரும், ஏதோ அரசியலை கரைத்து குடித்தவர்கள் போல் ஆடிய(ஆடிக் கொண்டிருக்கும்) ஆட்டமும், அக்கட்சியின் அழிவுக்கு பிரதானக் காரணமாக அமைந்தது.

தற்போதைய நிலையில், அக்கட்சியின் கதை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே கூறலாம். வரும் சட்டமன்ற தேர்தலிலும் ஒரு தோல்விக் கூட்டணியில் அக்கட்சி இடம்பெற்றால், அதன் முடிவு கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டுவிடும்.

எனவே, தற்போதிருக்கும் சூழலில், கடந்த நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியையேக் காப்பாற்றி, மெஜாரிட்டியுடன் வெல்லும் வழியை ஆராயாது, முடிந்து கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கு(தேமுதிக), புதிய தொடக்கத்தை வழங்கும் முடிவை திமுக மேற்கொண்டால், அது அக்கட்சியின் அரசியல் தவறுகளில் இன்னொன்றாக இணைந்து கொள்ளும் என்பது நிச்சயம்..!