மிழக சட்டமன்ற தேர்தல் 2021 ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலை யில், தேமுதிக இளைஞர் அணி தலைவரும்,  பிரமேலதா விஜயகாந்தின் தம்பியும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கார்ட்டூன்  தமிழகஅரசியல் களத்தில் புயலை கிளப்பி உள்ளது. இது,  பிரேமலதாவின் அரசியல் பேரத்துக்கு அச்சாரம் என்று அரசியல் விமர்சகர்கள்  கூறி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வர இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில்,  எல்.கே.சுதீஷ் கொளுத்திப்போட்ட கார்ட்டூன் அரசியல் களத்தில் பற்றியெரியத் தொடங்கி உள்ளது.  தேர்தல் களம் பரபரபரக்கத் தொடங்கி உள்ளது.

இப்போதே அரசியல் கட்சிகளுக்கு இடையே மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசல் புரசலாக தொடங்கி விட்ட நிலையில், தொகுதி பேரங்களும்  தொடங்கி உள்ளன.  ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற முனைப்புடன் திமுக தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி உள்ளது. அதிமுகவின் சமீப கால அரசியல் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

தமிழகத்தில் இருபெரும் கட்சிகளான திமுக, அதிமுக, தங்களது கூட்டணியை உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட கூட்டணியே தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக கூட்டணியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக அதிமுக கூட்டணி கட்சிகளான தேமுதிக, பாமக, பாஜக போன்ற கட்சிகளின் நடவடிக்கைகள்,  அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்பதை உறுதி செய்யும் வகையிலேயே உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில்தான்,  விஜயகாந்த் மைத்துனர்  எல்.கே.சுதீஷ் கொளுத்திப்போட்ட கார்ட்டூன், திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தோ, பேசக்கூட முடியாத நிலையில், தங்களுக்கு இன்னும் வாக்கு வங்கி இருப்பதாக, அவ்வப்போது ஏதாவது கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும், பிரேமலதா விஜயகாந்தின், அரசியல் பேரத்திற்கான அச்சாரமே இந்த கார்டூன் என்று விமர்சிக்கப்படுகிறது. இதை தேமுதிகவினர், பிரேமலதாவின் அரசியல் சாணக்கியத்தனம் என்று மெச்சுகிறார்கள்.

2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில்  கட்சியை ஆரம்பித்த விஜய காந்த், தேமுக கடந்த 2006ம் ஆண்டு  நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, விஜயகாந்த் ஒருவர் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், மாநிலம்  முழுவதும் ஓரளவு வாக்கு வங்கியை பெற்றிருந்தார்.

3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரை யான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளை பெற்றிருந்தார். இது தமிழக அரசியல் வரலாற்றில், விஜயகாந்த் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால், 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டி யிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.  இந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தைகூட பெற முடியாத அளவுக்கு  திமுக தோல்வி அடைந்தது, தமிழகஅரசியல் வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேமுதிகவுன் வளர்ச்சி தமிழக மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றியினால் ஏற்பட்ட தலைக்கணத்தினால், ஜெயலலிதாவுடன் சட்டமன்றத்தில் எதிர்த்து வாக்குவாதம் செய்து பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால் அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தலிகளில் பெரும் தோல்வியை சந்தித்தார்.

இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு, பேச முடியாமல் அவதிப்பட்டார். அதனால், கட்சியின் தலைமைப் பொறுப்பை விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும், மைத்துனர் சுதீசும் கைப்பற்றினர். இவர்களின் நடவடிக்கை பிடிக்காமல், தேமுதிக எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகிய  நிலையில், தேமுதிகவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இருந்தாலும், ஏற்கனவே உள்ள வாங்கு வங்கியை காரணமாக கூறி, கடந்த பல ஆண்டு களாக அவர் நோய்வாய் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தை, அவ்வப்போது, பொதுவெளியில் பொம்மையாக உட்கார வைத்து, அரசியல் செய்து வருகிறார் பிரேமலதா.

தேமுதிக கூட்டணி சேர்ந்ததால் தான் அதிமுக ஆட்சியில் அமர முடிந்தது என்று கூறியவர், அதிமுக ஆட்சி தொடருவதற்கு தேமுதிக தான் காரணம் என்றும், அதிமுக எம்.பி.க்களால் எந்தவித பயனும் இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஆனால்,  நாடாளுமன்ற தேர்தலின்போது, அதிமுகவுடன்தான் கூட்டணி அமைத்தார்.

முன்னதாக,  தேமுதிகவுக்கு மக்களிடையே  செல்வாக்கு இருப்பதாக கூறிக்கொண்டு, கடந்த ஆண்டு (2010) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, திமுக, அதிமுக கட்சிகள் இடையே ரகசிய அரசியல் பேரத்தை  நடத்தினார்.

ஒருபுறம், அதிமுக கூட்டணியில் இணைவதாக கூறிக்கொண்டு, தொகுதிகளையும், பண பேரத்தை யும் நடத்தி வந்த நிலையில், மற்றொருபுறம், திமுக தலைவர்களை ரகசியமாக சந்தித்து, அவர்களிடமும் தொகுதி மற்றும் பணப் பேரங்களை நடத்தி வந்தார்.

இந்த விவகாரம், திமுக தலைமைக்கு தெரிய வந்த நிலையில், தேமுதிக மற்றும் பிரேமலதாவின் மானம் காற்றில் பறந்தது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயலே, பிரேமலதாவின் நடவடிக்கையால் எரிச்சல் அடைந்து தொகுதிபங்கீடு பேச்சுவார்த்தையில் இருந்து இடையில் எழுந்து ஓடிய நிகழ்வு களும் அரங்கேறின.

அப்போது,  எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனை பெரிய மனுஷனா என்று கேள்வி விடுத்தவர், சட்டையை கிழித்துக்கொண்டு போட்டோ எடுக்க வாங்க.. வாங்க என்று கூறிய திமுக  தில்லுமுல்லு கட்சி  என்றும் கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில்தான் சமீபகாலமாக, பிரேமலதாவின் அதிரடி பேட்டி மற்றும் பேச்சுக்கள், தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளாக்கப்பட்டு உள்ளது.

விஜயகாந்த் பிறந்த நாளன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தேமுதிக தனித்துப் போட்டி யிட விரும்புவதாக தெரிவித்து, அதிமுக கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தினார்.

மேலும், சமீபத்தில், குடும்பத்தோடு ராமேஷ்வரம் சென்றிருந்த நிலையில், அங்கு செய்தியாளர் களிடம் பேசும்போது, தமிழகத்தில், கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் இருந்த போதே கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர் விஜயகாந்த். தற்போது, அவர்கள் இல்லாமல் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல்  வெற்றிடத்தை விஜயகாந்தால் மட்டுமே நிரப்ப முடியும். 2021  சட்டப்பேரவை தேர்தலில், தேமுதிக தனித்து போட்டியிடுவதையே தொண்டர்கள் விரும்புவதாகவும் பிரேமலதா தெரிவித்தார்.

பிரேமலதாவின் இந்த பேச்சு அவரது அரசியல் பேரத்துக்கான அச்சாரம் என்று விமர்சிக்கப்பட்டது. இந்த சூழலில்தான், இன்று எல்.கே.சுதீஷ் பதிவிட்ட கார்ட்டூன், அதிமுக, திமுக கட்சிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது.

தேமுதிக துணை செயலாளர், இன்று வெளியிட்ட கார்ட்டூனில், நடுவில் விஜயகாந்த் நிற்க, அவரது காலடியில்  மஞ்சள் துண்டு தோளில் போட்ட பெரியவர், கறுப்பு சட்டை போட்டவர், வேள்ளை வேட்டி சட்டையில் பிற அரசியல்வாதிகள், உள்ளிட்ட நிறைய பேர் விஜயகாந்தை சுற்றி, கீழே விழுந்து கும்பிடுவது போல வரையப்பட்டுள்ளது.

இந்த கார்ட்டூனைப் பார்த்த திமுக, அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

திமுக எம்.பி.  செந்தில்குமார், தேமுதிக தலைமைக்கு எச்சரிக்கை விடுத்து எதிர் பதிவிட்டிருந்தார். அதில், . சிலர் அழிவுக்கான தங்கள் பாதையை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இதற்கு சுதீஷ் மன்னிப்பு கேட்டு அவர் FB பக்கத்தில் இந்த பதிவை நீக்கவேண்டும். சுயமரியாதை தன்மானம் மிக்க தொண்டர் ஒருபொழுதும் இதனை ஏற்க மாட்டார்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மூத்த தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில், கார்ட்டூன் வெளியிட்ட தேமுதிக மீது திமுக, அதிமுக கட்சி தொண்டர்கள் கொலை வெறியில் உள்ளனர்.

கடுமையான எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அடுத்த 6 மணி நேரத்தை அந்த கார்டூனை சுதீஷ் நீக்கி விட்டார்.

தேமுதிகவின் சமீபகால, அரசியல் நடவடிக்கைகள் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, அரசியல் விமர்சகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியல் கட்சிகளின் திமுக, அதிமுக இரண்டிலுமே உட்கட்சி பூசல்கள் உள்ளது. திமுகவில் குடும்ப ஆதிக்கம் உள்ளதாகவும்,, பெருந்தலைகள் ஓரங்கட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில்,  பலர் மாற்றுக்கட்சிக்கு தாவி வருகின்றன.

அதுபோல அதிமுகவில், அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கோதாவில் சில கோஷ்டிகளும், சசிகலா வருகையை எதிர்பார்த்து சில கோஷ்டிகளும் அரசியல் செய்து வருகின்றன. இதனால், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சோபிக்குமா என்பதே கேள்விக்குறியாகி வருகிறது.

இதுபோன்ற சூழலை, தனக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில், அதிருப்தி தலைவர்களுக்கு வலைவீசி வருகிறது. தேர்தலில், பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று கூறி வருகிறது.

இதுபோன்ற அரசியல் சூழலில்தான், தேமுக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கொளுத்திப் போட்ட காட்டூன், தமிழக அரசியலில் பற்றி எரியத் தொடங்கி உள்ளது.

ஏற்கனவே, கடந்த தேர்தல்களில் கூட்டணி தொடர்பாகவும், தொகுதிகள் ஒதுக்கீடு தொடர் பாகவும், பணபேரம் நடத்திய, பிரேமலதா, அடுத்தஆண்டு (2021) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும், விஜயகாந்தை வைத்து, அரசியல் பேரத்தில் ஈடுபடும் வகையில், மக்களிடையே தேமுதிகவுக்கு செல்வாக்கு இருப்பதுபோல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க முனைந்து வருகிறார்.

இதன்மூலம், கட்சியின் வளர்ச்சியை குழிதோண்டி புதைத்துவிட்டு, எப்போதும் போல அரசியல் பேரத்துக்கு இப்போதே அச்சாரம் போடத் தொடங்கி உள்ளனர் பிரேமலதா, சுதீஷ் கூட்டணி.