நெட்டிசன்:

வாட்ஸ்அப் பதிவு…

மகாளய பட்சம் என்றால் என்ன?

இந்த உலகத்திலுள்ள நோய்களிலேயே கடுமையானது பசி. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். இருப்பவர்கள், இல்லாதவர்களின் பசியைத் தீர்ப்பதற்கென்றே உருவான காலம் தான் மகாளயபட்சம்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முன்னதாக உள்ள 14 நாட்களே மகாளயபட்சத்தில் அடங்கும்.

குருசேத்ர யுத்தத்தின் முடிவில், கர்ணனைக் கொல்லும் நேரம் வந்தது. அவன் தர்மங்கள் பல செய்த மாபெரும் வள்ளல் என்றாலும் கூட, அதர்மத்துக்கு துணை போன துரியோதனனுடன் சேர்ந்திருந்ததால், அவனை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் கிருஷ்ண பரமாத்மா.

அர்ஜுனன், மீது விட்ட சில அம்புகள், அவனைக் காயப்படுத்தி சாய்த்தன. ஆனால், உயிரைப் பிரிய விடாமல் அவன் செய்த தர்மம் காத்து நின்றது. அப்போது, அந்தணராக வேடமணிந்து, அவன் செய்த தர்மத்தை தாரை வார்த்துப் பெற்றார் கிருஷ்ணர். அதற்காக, அவனுக்கு மோட்சம் அளித்தார்.

சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு, அவன் செய்த பொன், நவரத்தின தானத்துக்கு பலனாக தங்க மாளிகை கட்டித் தரப்பட்டிருந்தது. பலவிதமான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன; ஆனால், அவனுக்கு அங்கே உணவு கிடைக்கவில்லை.

இதற்கு காரணம் தெரியாமல் அவன் தவித்தபோது, தேவர்கள் அவனிடம், “கர்ணா… நீ பூமியில் இருந்தபோது பொன்னும், மணியுமே தானம் செய்தாய்; அன்னதானம் செய்யவில்லை. எனவே, நீ இப்போது பூமிக்குச் செல். இப்போது மகாளயபட்ச காலம். பிதுர்கள் (மறைந்த முன்னோர்) பூமிக்குச் செல்லும் காலம்.

அவர்களை அவரவர் உறவினர் வரவேற்று, தர்ப்பணம் செய்து, ஏழைகளுக்கு அன்னதானமும் செய்வர். இக்காலத்தில், நீ மறைந்திருந்து அன்னதானம் செய்து வா. பின்பு இங்கு உணவும் கிடைக்கும்!” என்றனர்.

கர்ணன் அவ்வாறு பூமிக்கு வந்த காலமே மகாளய காலம் ஆனது. உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச.காலத்தில், நாம் எல்லாருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். தினமும் காலை யில் பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுக்க வேண்டும். காலை, மதியம் உணவிற்கு முன், காகங்களுக்கு சோறிட வேண்டும். 14 நாட்களும் தினமும் ஒரு ஏழைக்காவது உணவு கொடுக்க வேண்டும்.

ஏதாவது ஒருநாள் ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி கடற்கரையிலோ, கங்கை (காசி), தாமிரபரணி (பாபநாசம்), காவிரி (ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்) ஆகிய நதிக்கரைகளிலோ, குற்றாலம் அருவிக்கரையிலோ தர்ப்பணம் செய்து, அங்குள்ள கோவில்களில் வழிபட்டு வர வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி, உலகி லுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்…..