பதான்கோட் :

ஹேந்திர சிங் தோனியைத் தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக ஆகஸ்ட் 15 அன்று அறிவித்த சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்காக துபாய் சென்றிருந்தார்.

இறுதினங்களுக்கு முன் தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விளங்குவதாகவும் இந்தியா திரும்ப இருப்பதாகவும் கூறிய சுரேஷ் ரெய்னா, இன்று தனது ட்விட்டரில் இரண்டு பதிவுகளை இட்டுள்ளார்.

அதில் அவர், தனது அத்தை மற்றும் மாமாவின் இரண்டு மகன்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டிருப்பதாகவும், இதில் தனது மாமா மற்றும் அவரது ஒரு மகனும் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இது குறித்து பஞ்சாப் மாநில அரசு முறையான விசாரணை நடத்தி என்ன நடந்தது என்பதை விரைவாக கண்டுபிடிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து கூறிய பஞ்சாப் காவல் துறை அதிகாரி, பஞ்சாப் மாநிலம் பதன்கோட் அருகில் உள்ள தரியான் கிராமத்தில் ஆகஸ்ட் மாதம் 19 மற்றும் 20 ம் தேதி இரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஆஷா தேவி, அஷோக் மற்றும் இவர்களது இரண்டு மகன்களான கவுசல் குமார், அப்பின் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்திருக்கிறது.

ரெய்னாவின் மாமா அஷோக் சம்பவத்தன்று இரவே இறந்து விட்டதாகவும், கவுசல் குமார் நேற்று இறந்ததாகவும் கூறினார். ஆஷா தேவி கவலைக்கிடமான நிலையில் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அப்பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

படுகாயமடைந்த அனைவரும் கவலைக்கிடமான நிலைமையில் இருந்ததால் அவர்களிடம் இருந்து உறுதியான தகவல் எதுவும் பெறமுடியவில்லை எனவும் அதனால் கொலையாளிகளை அடையாளம் காண முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுரேஷ் ரெய்னாவின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இது குறித்து பஞ்சாப் போலீசார் விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர்.