பிரணாப்_முகர்ஜியும்… தமிழக_அரசியலும்

நெட்டிசன்

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு

பிரணாப் முகர்ஜி என்றால் இந்திய குடியரசுத் தலைவர். 2001ல் இருந்து காங்கிரசின் முக்கிய தலைவர், மத்திய அமைச்சர். இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக நடந்துக் கொண் டார் என்ற செய்திகள் மட்டுமே தமிழக மக்கள் அறிவார்கள். அதற்கு மேலும் தமிழகத்தின் கடந்த கால அரசியல் நிகழ்வுகளில் அவர் சம்பந்தப்பட்டதை குறிப்பிட்டாக வேண்டும்.

இவருடைய அரசியல் மேற்கு வங்கத்தில் 1966-67 காலகட்டங்களில் அஜாய் முகர்ஜி தலைமையேற்று இவருடைய அரசியல் தீவிரமாக துவங்குகின்றது. அதுல்யா கோஷ், பிரஃபுல்லா சந்திரசென் என்ற மூத்த தலைவர்களின் அறிமுகமும் இவருக்கு கிடைக்கின்றது. வங்க அரசியலில் அந்த காலத்தில் கனிகான் சௌத்ரி, சித்தார்த்த சங்கர் ரே, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி என மூன்று குழுக்களாக ஆளும் இந்திரா தலைமையில் காங்கிரசில் இருந்தனர். இந்திரா காந்தி இறந்த பிறகு அவசரமாக கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு பிரதமராகும் கனவில் ஓடி வந்தார். அதே போல் ராஜீவ் காந்தி இறந்த பிறகும் நரசிம்மராவ் பிரதம ராகும் போதும் அதே நினைப்பில் இருந்தார். ஏனோ காங்கிரஸ் இவரை புறக்கணித்தது. பிரணாப் முகர்ஜி கனிகான் செளதிரியை பின்பற்றியிருந்தார். இருப்பினும் சித்தார்த்த சங்கர் ரேவோடும் தொடர்பில் இருந்தார். வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்த பிரிந்த நேரத்தில் பிரணாபுடைய பணிகள் அந்த நாட்டில் இருந்து வந்த முக்தி பாஹினிகளுக்கு உதவிப்பணிகளும் ஆற்றிக்கொண்டிருந்தார்.

இவரோடு இன்றைக்கு ராஜஸ்தான் முதலமைச்சராக இருக்கும் அசோக் கேலாட்டுக்கு அன்றைக்கு அந்த பணியில் இருந்ததால் இந்திராவின் கவனத்திற்கு வந்தவர். இந்த நிலையில் இந்திரா காங்கிரசில் இருந்து வெளியேறி பங்களா காங்கிரஸ் என்று ஒரு கட்சியை உருவாக்கியதில் முக்கியமானவர்.

அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் மாநில சுயாட்சி குறித்து இராஜமன்னார் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி கலைஞர் நடத்திய நிகழ்வுக்கு ஒரு மாநில கட்சியாக கலந்துக் கொண்டு மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்தார்.

தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சியில் மூப்பனார், நெடுமாறன் என்ற பிரச்சினைகள் எழுந்த போது ஏ. ஆர். அந்துலே, வசந்த சாத்தே, பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் மூப்பனாருக்கு ஆதரவாக இருந்தனர். இந்திரா காந்தி நெடுமாறனை தன் மகனாக நினைத்து ஆதரவுக் கரம் நீட்டும்போது பி.வி.நரசிம்மராவ், ரஜினி படேல் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். அப்போது நெடுமாறனோடு வாழப்பாடி ராமமூர்த்தி, எம்.பி. சுப்பிரமணியம், தஞ்சை ராமமூர்த்தி, தீர்த்தகிரி கவுண்டர், ஜீவரத்தின முதலியார், மணலி ராமகிருஷ்ண முதலியார், ஏ.பி.சி வீரபாகு என எங்களைப் போன்றோர் இருந்தோம். அன்றைக்கு இந்திரா காந்தி விரும்பியவாறு நெடுமாறனுக்கான அரசியல் பணிகளுக்கான வழிகள் தடையில்லாமல் இருந்திருந்தால் தமிழக அரசியலுக்கு மட்டுமல்ல எங்களைப் போன்றோருடைய அரசியலின் போக்கும் சீர் பட்டிருக்கும்.

பிரணாப் தான் வெளியிட்ட மூன்று தொகுதி நினைவுகள் The Dramatic Decade (The Indira Gandhi Years) இரண்டாவது தொகுதி The Turbulent Years (1980-1996) The Coalition Years (1996-2012) என்று மூன்று தொகுதிகள் ரூபா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நான்காவது தொகுதி 2012ல் இருந்து அவர் இறுதிக்காலம் வரை எழுதப்பட்ட நினைவுகள் அவர் மறைவுக்கு பிறகு தான் வெளியிட வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். அதில் என்னென்ன சங்கதிகளை இந்திரபிரஸ்தா – டெல்லி பாதுஷா அரசியல்களை சொல்லப் போகிறாரோ தெரியவில்லை.

முதல் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரசில் மூப்பனார், நெடுமாறன் என 1980 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நடந்த குறைகளை தீர்க்க இந்திரா காந்தி, நரசிம்ம ராவ் முன் வந்தாலும் வசந்த சாத்தே, ஏ.ஆர். அந்துலே, பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் நாங்கள் ஏற்றுக் கொண்டு நெடுமாறன் தலைமையில் இயங்கிய அணிக்கு நியாயம் கிடைக்காமல் இருந்ததை குறிப்பிட்டே ஆக வேண்டும். எத்தனை முறை டெல்லி பயணம். இந்திரா முதல் நரசிம்மராவ், வசந்த சாத்தே, ஏ.ஆர். அந்துலே, பிரணாப் முகர்ஜி வரை சந்தித்து சந்தித்து தீர்வு கிடைக்காமல் தான் போனது. அன்றைய காலகட்டத்தில் காங்கிரசில் முக்கிய புள்ளியாக நெடுமாறன் இருந்தார்.

இத்துடன் நெடுமாறனைப் பற்றி The Dramatic Decade (The Indira Gandhi Years) தொகுதியில் 140வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதை சான்றாக இணைத்துள்ளேன். காங்கிரசில் அன்றைக்கு மூத்த தலைவர்களான பி.வி. நரசிம்மராவ், திருமதி. மோக்‌ஷினா கித்வாய், ஜெகன்னாத் பக்காடியா, ஹெச் கே எல் பகவத் போன்ற வர்களுடன் பட்டியலில் நெடுமாறன் இருந்ததை கவனிக்க வேண்டும். தமிழகத்திலிருந்து ஜி. கே. மூப்பனாரும், வாழப்பாடியும் அந்த பட்டியலில் இருக்கின்றார்கள். என்ன செய்ய? காமராஜருக்கு நெருக்கமாக இருந்தார். இந்திரா அவரை “My dear son” என்று அழைக்கும் அளவிற்கு நெருக்கமாக இருந்தார். இது தான் அரசியல் என்றால் என்ன சொல்ல? நான் ஒவ்வொரு அசைவிலும் நெடுமாறனோடு இருந்திருக் கின்றேன். அதைப் பார்த்து இன்றைக்கும் என் மனது ஒப்பவில்லை. நான் சொல்வேனே தகுதியே தடை என்று, அது இயல்பாகிவிட்டது. இப்படிப்பட்ட தலைவர் களை காங்கிரஸ் புறக்கணித்ததால் தான் இன்றைக்கு காங்கிரசில் ஏற்பட்டுள்ள சில எதிர்வினைகளாகும். இதைக் குறித்து விரிவான பழைய சங்கதிகளோடு நேதாஜிபோஸ் காலத்திலிருந்து இன்றைக்கு வரை நடந்த நிகழ்வுகளை பதிவு செய்யவுள்ளேன்.

இதை குறை என்று நினைக்க வேண்டாம். பிரணாப் முகர்ஜி மறைந்து விட்டார். ஆனால் வரலாற்றில் சொல்ல வேண்டிய விஷயங்களை நாகரீகத்தோடு அர்த்தத்தோடு சொல்ல வேண்டியது அவசியமானது.

அதே போல ஈழப் பிரச்சினை, முள்ளிவாய்க்கால் 2009 இறுதிப் போரில் பிரணாப் முகர்ஜி தமிழர்களை பாதுகாக்க கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை. பிரணாப் முகர்ஜி நுண்மான் நுழைபுலம் கொண்ட கற்றறிந்த ஆளுமை. மறுக்கவில்லை. ஆனால் அவர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி போன்றவர்களோடு மறைமுகமாக முரண்பட்டவர் மட்டு மல்ல, மாறுபட்டவர். தமிழ்நாட்டில் மூப்பனாரோடு அவருடைய நட்பு ஆழமானது. அதனால் தான் ஜி.கே. வாசனுக்கு மறுபடியும் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு கிட்டியது என டெல்லி பத்திரிக்கையாள நண்பர் தகவலைச் சொன்னார். வங்க அரசியலில் இவருக்கும் மம்தா பேனர்ஜிக்கும் சில காலம் ஒத்துப் போனதும் பின்னாட்களில் இவருக்கு எதிராக பானர்ஜி முரண்பட்டார்.

இந்திரா குடும்பத்தாரும் இவர் கீழ் பணியில் இருந்த மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கினார்கள். இவர் விரும்பிய பிரதமர் பதவி கிட்டவில்லை. ஆனால் குடியரசுத் தலைவர் இவரை விட பொருத்தமான ஆளுமை இல்லை என்ற நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனக்கு நெருக்குமான முன்னாள் மத்திய அமைச்சர் கே.பி.உன்னிகிருஷ்ணன் இவரை ’பிரணாப் பாய், நீங்களும் கட்சியை உதறுகிறீர்கள், கட்சியும் உங்களை உதறுகிறது. ஆனால் பதவி நாற்காலி எப்படியோ அமர்ந்து விடுகிறீர்களே?’ என்று வேடிக்கையாக குறிப்பிடுவார். வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்று தெளிவாக இருப்பார். தன்னுடைய சுயசரிதையினை மூன்று
தொகுதிகளாக ஆங்கிலத்தில் குடியரசுத் தலைவராக இருக்கும்போதே வெளியிட்டார். இதை தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்று தினமணி ஆசிரியர் நண்பர் வைத்தியநாதன் பலமுறை அவர் பார்க்கும்போதெல்லாம் சொல்வார்.

……

வங்க மொழியில் தா என்றால் அண்ணன் என்று பொருள். பிரணாப் தா என்று தான் பெரும்பாலும் அழைப்பதுண்டு. பிரணாபுக்கு வேண்டிய டெல்லி இந்துஸ்தான் டைம்ஸ்சில் பணியாற்றும் செய்தியாளர் சற்று முன் என்னுடைய கைபேசியில் அழைத்து ’பிரணாப் தா விடைபெற்றார்”. தொடர்ந்து ’இந்திரா காந்தியின் மரணத்தின் போது கொல்கத்தாவிலிருந்து நம்பிக்கையுடன் டெல்லி பறந்து வந்தார். வாய்ப்பு கிட்டவில்லையென்றாலும் தன்னைத்தானே சமரசம் செய்துக் கொண்டு மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக இருந்தார். நரசிம்மராவ் பிரதமராகும் காலத்திலும் அவருடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபொழுது நேரடி வழி
மேலாண்மைக்கு CBDT ஒட்டுக் கேட்கும் (bugging) அதிகாரம் அளிக்கப்பட்டது.

ஆனால் பின்னால் இது சிதம்பரத்திற்கே பிரச்சினைகள் ஏற்படும் சூழல் இதனால் ஏற்பட்டது. நிதியமைச்சரான பிரணாப் ப.சிதம்பரம் காலத்தில் அவர் ஒட்டுக் கேட்டார் என்றும் முள்ளங்கி வளர்த்து கோடிக்கணக்கில் சிதம்பரம் வரி ஏய்ப்பை செய்தார் என்றும் Gammon Island, Mauritius என விவகாரங்கள் எல்லாம் எழுந்தது என்று நண்பர் தெரிவித்தார். இதை மன்மோகன் சிங் கவனத்திற்கு பிரணாப் எடுத்துச் சென்றார் என்ற சர்ச்சையும் டெல்லி நார்த் பிளாக்கில் சில காலம் உலவியது. டெல்லி சாம்ராஜ்ஜியத்தில் வங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதுல்யா கோஷில் தொடங்கி பிரணாப் வரை அரசியல் சதுரங்கத்தில் களமாடியது ஏராளம். பிரணாப் ஒரு பட்டர்ஃப்ளை தான்”என நகைச்சுவையாக முடித்தார்.

ராஷ்டிரபதி பவன் குறித்தான தரவுகளை எல்லாம் அழகிய படங்களோடும் நல்ல கட்டமைப்போடும் ஐந்து நூல்களை இவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் இவருடைய கண்காணிப்பில் வெளியிடப்பட்டது.
••••

1935 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தவர்.

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் சட்ட படிப்புகள் படித்த பிரணாப் முகர்ஜி, ஆசிரியராக, பத்திரிகையாளராக வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கினார்.

இந்திய வங்கிகளின் பல குழுக்களிலும் பங்கு வகித்துள்ளார். உலக வங்கியின் இயக்குநர் குழு உறுப்பினராகவும் பிரணாப் முகர்ஜி பணியாற்றியுள்ளார்.

இந்தியாவின் இளம் நிதி அமைச்சர் என்ற பெருமையை தமது 47ஆவது வயதில் பெற்ற பிரணாப் முகர்ஜியின் நாடாளுமன்ற வாழ்க்கை 1969 ஆம் ஆண்டு தொடங்கியது.

அதன் பின்னர் 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளிலும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1980 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் முதமுறையாக போட்டியிட்ட பிரணாப் முகர்ஜி அதில் தோல்வியடைந்தார்.

அதன் பிறகு, 24 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்திரா காந்தி அமைச்சரவையில் 1982 ஆம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.

குடியரசுத் தலைவராக இருந்த போது,  2015ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று, தனது பழைய வாழ்க்கையை நினைவு கூறும் வகையில் ஒரு நாள் ஆசிரியராக மாறினார் பிரணாப் முகர்ஜி.

டெல்லி பிரசிடன்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசியல் அறிவியல் பாடத்தை மிகுந்த ஆர்வத்துடன் அவர் நடத்தினார்.

பியான்ட் சர்வைவல்: எமெர்ஜிங் டைமன்சன்ஸ் ஆப் இந்தியன் எக்கனாமி, ஆஃப் தி டிராக், சாகா ஆப் ஸ்ட்ரக்குள் அண்ட் சேக்ரிபைஸ், சேலஞ்சஸ் பிஃபோர் தி நேஷன் உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

ஆழ்ந்த இரங்கல்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்