மும்பை :

 

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், நாட்டின் தரவு மைய (Data Center) தொழில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறியுள்ளதுடன் வர்த்தகம் தடையில்லாமல் தொடர்வதை உறுதி செய்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், தரவு மையங்களின் திறனை அதிகரிக்க நடந்து வரும் நடவடிக்கை, தற்போதுள்ள உள்கட்டமைப்பு காரணமாக மும்பைக்கு சாதகமாக உள்ளதாகவும் இந்தத் துறையில் உள்ள பெரு நிறுவனங்கள் மும்பையை தேர்ந்தெடுக்கவே விரும்புகின்றன என்று ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மொத்த இணைய வழி நிர்வகிக்கப்படும் தரவு தள மையத் திறனில்  (மேகத் திறன்)  (Cloud Data Centers)  62 சதவிகிதம் மும்பையில் உள்ளது, அதைத் தொடர்ந்து புனே மற்றும் சென்னை உள்ளன.

 

மேலும் அதன் உள்கட்டமைப்பு நன்மைகள் காரணமாக இந்த நிறுவனங்களின் நன்மதிப்பை பெறுகிறது, மும்பையைத் தொடர்ந்து ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் இருக்கிறது.

அதுமட்டுமல்ல, 2020 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மும்பையில் கூடுதலாக 360 மெகாவாட் திறன் கொண்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மும்பையைத் தொடர்ந்து சென்னையில் அதே காலகட்டத்தில் 134 மெகாவாட் திறன் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

2020-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் 375 மெகா வாட்டாக இருக்கும் இந்தியாவின் தரவு மைய திறன்  2025-ம் ஆண்டில் 1,078 மெகாவாட்டாக உயரும் என்றும் இதனால் இந்திய மதிப்பில் 33,000 கோடி ரூபாய்க்கு முதலீடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

தரவு பாதுகாப்பு சட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், நிறுவனத்தின் உள்ளிருந்த  தரவுகள் ‘இணை இடங்களில்’ (Colocation) மாறுவது, புதிய தொழில்நுட்பங்களான 5 ஜி, எட்ஜ் கம்ப்யூட்டிங் மற்றும் அனைத்திற்கும் இணைய வசதி (IoT) செயல்படுவதால், இவ்வகையான உள்கட்டமைப்பை நிறுவ, நிலையான முதலீட்டாளர்களின் தேவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கும் என்று “டிஜிட்டல் பொருளாதாரத்தை இயக்கும், இந்தியாவின் தரவு மையங்களை கற்பனை செய்து பாருங்கள்” என்று தலைப்பிட்ட  ஜே.எல்.எல் நிறுவனத்தின் 2020-ம் ஆண்டுக்கான முதல் அரையாண்டு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் தரவு மைய சந்தை சிறப்பாக செயல்படும், வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம், முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரிப்பது மற்றும் நிலையான நீண்ட கால வருவாய் ஆகியவற்றால் உந்தப்படுகிறது. கூடுதல் இணை தளங்கள் மூலமாக இந்தத் துறையில் வளர்ச்சி ஏற்படும்,  குறைந்த முதலீடு, உயர்ந்த தரவு பாதுகாப்பு, தடையற்ற சேவைகள் மற்றும் மாறுதலுக்கு ஏற்றது போன்ற அம்சங்கள் இந்த இணை தளங்களால் (Colocation) பயனளிக்கும்.  மேலும்,  இந்தியாவின் தரவு மைய இணை தளங்களின் திறன் குறித்து முதலீட்டாளர்களை பரிசீலனை செய்ய ஊக்குவிக்கும்” என்று ஜே.எல்.எல் இந்தியாவின் மும்பை பிராந்திய நிர்வாக இயக்குநர் கரண் சிங் சோடி கூறினார்.

ஊரடங்கிற்கு முன் சராசரியாக 270 பிட்டா பைட்களில் (பிபி) (PetaByte) இருந்த தினசரி தரவு பயன்பாடு ஊரடங்கு காலத்தில் 14 சதவீதம் உயர்ந்து சராசரியாக 308 பிபி-யாக உள்ளது. தரவு மையத் தொழில், 2020-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மகத்தான ஊக்கத்தை அளித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஆந்திரா மற்றும் பீகாரில் தரவு பயன்பாடு 12 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் அதிக தரவு நுகர்வைக் கொண்ட மகாராஷ்டிராவில் தரவு நுகர்வு 7 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

ஜூன் 2020 நிலவரப்படி மும்பை 19 மெகாவாட் கூடுதல் தரவு திறன் பெற்றுள்ளது, இது மொத்த கூடுதல் தரவு திறனில் 42 சதவீத அதிகரிப்பாகும்.

“தரவு தளங்களின் திறனை அதிகரிக்க, உள்கட்டமைப்பை சாதகமாக கொண்டுள்ள மும்பை, தற்போது கிளவுட் நிறுவனங்கள் விரும்புமிடமாக உள்ளது. கடல் வழி கண்ணாடி இழை கேபிள் இணைப்பகம் (Undersea OFC) அமைந்திருப்பது மற்றும் வளர்ச்சிக்கான குறைந்த முதலீடு ஆகியவற்றின் காரணமாக சென்னையும்  போட்டியில் உள்ளது” என்று ஜே.எல்.எல் இந்தியாவின் தலைமை பொருளாதார நிபுணரும் ஆராய்ச்சி மற்றும் ரியல் எஸ்டேட் நுண்ணறிவு சேவைப் பிரிவு தலைவருமான சமந்தக் தாஸ் கூறியதாக ‘மனிகன்ட்ரோல்’ செய்தி வெளியிட்டுள்ளது.