சென்ன‍ை: சுரேஷ் ரெய்னா குறித்து தான் கூறிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாகவும், சென்னை அணிக்கான அவரின் பங்களிப்பு மகத்தானது என்றும் கூறியுள்ளார் அந்த அணியின் தலைவர் என்.சீனிவாசன்.

மேலும், இந்த நேரத்தில் அவருக்கான தமது ஆதரவு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “சென்னை அணிக்கான ரெய்னாவின் பங்களிப்பு யாருக்குமே இரண்டாம் பட்சமானதல்ல. அவர் கடந்த பல்லாண்டுகளாக இந்த அணிக்காக அருமையான பங்களிப்பை அளித்துள்ளார்.

அவரின் தற்போதைய நிலையை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் அவருக்கான ஒரு இடைவெளி இது என்பதை உணர வேண்டும்” என்றார் அவர்.

கடந்த 2008ம் ஆண்டு முதலே, சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார் ரெய்னா. அவர் இதுவரை, 189 இன்னிங்ஸ்கள் ஆடி மொத்தம் 5368 ரன்களை அடித்துள்ளார்.

கடந்த 12 ஐபிஎல் சீசன்களில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இவர் சென்னை அணியின் துணைக் கேப்டனாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.