இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை, புலியைப் போன்று நேரடியான ஒன்றாக இருந்தது. அது முகத்திற்கு முகம் பார்த்தது. ஆனால், தற்போதைய நெருக்கடி நிலை, பசுந்தோல் போர்த்தியப் புலியாக உள்ளது. அது காப்பான் என்ற வேடமணிந்து, அனைத்தையும் வேட்டையாடுகிறது என்றுள்ளார் கட்டுரையாளர் தேவனூரா மகாதேவா.
பிரஷாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது மற்றும் அதுதொடர்பான அம்சங்களை ஆராய்கிறார் கட்டுரையாளர் தேவனூரா மகாதேவா.
“நான் முக்கியப் பொறுப்பிலுள்ள எனது நண்பர் ஒருவரிடம் இதுகுறித்து பேசினேன். அப்போது அவர், உச்சநீதிமன்றம் தானே குற்றம் சுமத்துகிறது, அக்குற்றத்தை தானே விசாரிக்கிறது மற்றும் குற்றத்தை நிரூபித்து தானே தீர்ப்பு வழங்குகிறது” என்றார் அவர்.
அவர் மேலும் கூறியதாவது, “பூஷணுக்கு எதிரான தீர்ப்பை வழங்குவதற்கு முன்னதாக, அவர் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை உச்சநீதிமன்றத்தின் சம்பந்தப்பட்ட 3 நீதிபதிகள் அமர்வானது, சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பதைப் போன்று, இந்தத் தீர்ப்பும் குருடாக உள்ளது.
‘வரலாற்றாளர்கள் கடந்த 6 ஆண்டுகளின் உச்சநீதிமன்ற செயல்பாடுகளைப் பார்க்கையில், அதிகாரப்பூர்வ நெருக்கடி நிலை இல்லாமலேயே, அது எந்தளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதை உணர்வார்கள். குறிப்பாக, கடைசி 4 தலைமை நீதிபதிகளின் செயல்பாடுகள் இந்த சீர்கேட்டில் நன்றாக கவனிக்கப்படும்’ என்பதாக பூஷணின் டிவிட்டர் பதிவு தெரிவிக்கிறது.
இந்தப் பதிவை, நீதிமன்ற அவமதிப்பாக கருதுகிறது உச்சநீதிமன்றம். இதனையடுத்து, தங்களின் உணர்ச்சியை ஒரு சட்டம் என்பதாக பாவித்து தீர்ப்பை அளித்துள்ளனர் நீதிபதிகள்.
இன்றைய நிலையில், பயம் என்பது நீதித்துறையை மட்டும் ஆட்டுவிக்கவில்லை. மாறாக, நிர்வாகம், சட்ட அவைகள் மற்றும் மீடியா என்ற அனைத்தையும் பிடித்துள்ளது அது. எந்தவொரு தன்னாட்சி அமைப்பும், இன்று அப்படியாக செயல்பட முடியவில்லை.
‘ரஞ்சன் கோகோய், தான் பதவி வகித்தபோது(அவரை நீதிபதி என்று நான் அழைக்க மாட்டேன்), பாரதீய ஜனதா அரசின் முன்பாக மண்டியிட்டு, ஒட்டுமொத்த உச்சநீதிமன்றத்தையும் அவர்களிடம் கையளித்துவிட்டார்’ என்று மார்க்கண்டேய கட்ஜூ கூறியிருப்பதை நாம் இங்கே நினைத்துப் பார்க்கலாம்.
அரசியல் சட்டத்தை எரிப்பதுகூட நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகாது. ஆனால், நீதிமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டுமென குரல் கொடுத்த பூஷண், நீதிபதிகளுக்கு குற்றவாளியாக தெரிந்துள்ளார்.
இந்தியா இதற்கு முன்னதாக இப்படியொரு சூழலை சந்தித்ததில்லை. இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையின்போதுகூட, நீதித்துறையில் நல்ல விழுமியங்கள் இருந்தன. அதேபோன்று தேர்தல் ஆணையம், மத்திய ரிசர்வ் வங்கி, சிபிஐ, மீடியா உள்ளிட்ட பலவற்றிலும் அப்படியேதான்.
அந்த நெருக்கடி நிலையானது புலியைப் போன்றது. அது எதையும் நேரடியாக எதிர்கொண்டது. முகத்திற்கு – முகம் என்பதாக இருந்தது. ஒடுக்குமுறைகள் இருந்தாலும், போராட்டங்களும் நடைபெற்றன.
ஆனால், இன்றைய நெருக்கடி நிலையானது, பசுந்தோல் போர்த்திய புலியாக உள்ளது. இது காப்பான் போல் முகமூடி போட்டுக்கொண்டு வருகிறது. இது எதையும் முகத்திற்கு நேராக எதிர்கொள்வதில்லை. நாட்டின் அனைத்து தன்னாட்சி அமைப்புகள் & உரிமைகள் நசுக்கப்படுகின்றன. சுதந்திரமான தன்னாட்சி நிறுவனங்கள் பாதி உயிருடனேயே இருக்க வேண்டிய நிலை. அவை, சர்வாதிகாரியின் விருப்பத்தின்படியே செயலாற்ற வேண்டிய நிலை.
இந்தியாவின் நிலை தற்போது மாபெரும் ஆபத்தில் உள்ளது. வேலைவாய்ப்பின்மை நம்மை மூழ்கடித்துக் கொண்டுள்ளது. வறுமை என்பது பசிக்கொடுமை என்ற நிலைக்கு மாறிச் செல்கிறது. அரசோ, பொதுச் சொத்துக்களை தனியாருக்கு விற்றுக் கொண்டுள்ளது.
தற்போது, பிரஷாந்த் பூஷணின் டிவிட்டர் பதிவை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, பொதுநலனுக்கான குரலை நசுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இன்றைய நிலையில், காந்தி – அம்பேத்கர் – ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரின் திறனைக் கொண்ட ஒரு தலைவர்தான் நாட்டிற்கு தேவை” என்றுள்ளார் கட்டுரையாளர்.
நன்றி: த வயர்