டெல்லி: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு தொடங்குகிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, தளர்வுகளுடன் நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தருணத்தில் நாடு முழுவதும் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடைபெறுகின்றன. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மேற்கண்ட தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சியினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
மறுபக்கம் கல்வியாளர்கள் இந்த தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வுகளை தள்ளி வைக்க கோரி மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.
வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. மத்திய அரசும், அனைத்து தேர்வுகள் குறித்த நாள்களில் கண்டிப்பாக நடைபெறும் என அறிவித்துள்ளது.
இத்தகைய கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்த ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலை தேர்வு, நாளை(செப்.1) தொடங்கி 6ம் தேதி வரை நடக்கிறது. தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில் 9,53,473 மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தில் 34 மையங்களில் 53,765 பேர் எழுத உள்ளனர்.