வெளிமாநிலங்களில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஊரடங்கு நெறிமுறை உள்ளது.
ஆனால் சர்ச்சை சாமியாரும், உத்தரபிரதேச மாநிலம் இன்னவோ தொகுதி பா.ஜ.க. எம்.பி.யுமான சாக்ஷி மகாராஜ் கடந்த சனிக்கிழமை ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதி என்ற இடத்துக்கு காரில் வந்து விட்டு மீண்டும் உ.பி.மாநிலத்துக்கு திரும்பி சென்றார்.
முன் அனுமதி இல்லாமல் வந்த அவரை, சாலைகளில் தடைகள் போட்டு நடு வழியில் மடக்கிய கிரிதி காவல்துறையினர் , அங்குள்ள சாந்திபவன் ஆசிரமத்தில் கட்டாயப்படுத்தி 14 நாட்கள் தனிமைப்படுத்தினர். இதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜார்கண்ட் மாநில தலைமை செயலாளரிடம் தகவல் தெரிவித்து விட்டுத்தான், இங்கே வந்ததாக மகாராஜ் கூறினார்.
இந்த நிலையில் சாக்ஷி மகாராஜ் நேற்று திடீரென விடுவிக்க பட்டார். அவர் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
‘’ ஜார்கண்ட் மாநில அரசுக்கு வந்த ’’அழுத்தம்’’ காரணமாக ஒரே நாளில் மகாராஜ் விடுவிக்கப் பட்டார்’’ என மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து கிரிதி காவல்துறை துணை ஆணையாளர் ராகுல் குமார் சின்ஹாவிடம் கேட்டபோது’’ மாநில அரசு எம்.பி.யை விடுவிக்க ஆணையிட்டது, எனவே அவரை விடுவித்துள்ளோம். அவர் எங்கு வேண்டுமானாலும் போகலாம்’’ என பட்டும் படாமலும் பதில் அளித்தார்.
-பா.பாரதி.