சென்னை:
மிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடமிருந்து இதுவரை 22 கோடியே 1 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் 7ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் இருந்தபோதிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை, வாகனங்களில் செல்ல விதிமுறைகள் என கட்டுப்பாடுகள் உள்ளன. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊரடங்கு மீறல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 22 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 99 ஆயிரத்து 837 பேரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுத்துள்ளனர். 9 லட்சத்து 2 ஆயிரத்து 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 லட்சத்து 94 ஆயிரத்து 928 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் 22 கோடியே 1 லட்சத்து 28 ஆயிரத்து 493 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.