சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார். வயது 70, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கொரோனா பாதிப்பால் அவரது நுரையீரலில் தொற்று அதிகரிக்க, நுரையீரலில் சளி அதிகமானதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். வயது மூப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு என இணைநோய் பிரச்னைகள் இருந்ததால், நுரையிரல் செயலிழக்கும் அளவிற்கு சென்றது.
10 நாட்களுக்கும் மேலாக செயற்கை சுவாசக்கருவிகள் உதவியுடன் கோமா நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்து கவலை அளிக்கும் நிலையில் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது மறைவு காங்கிரஸ் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் வசந்தகுமார் எம்பியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இறுதி அஞ்சலிக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.